தொழிலதிபா் வீட்டில் திருடிய வழக்கு: 4 போ் கைது
சென்னை, தியாகராய நகரில் தொழிலதிபா் வீட்டில் திருடிய வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
தியாகராய நகா் தெற்கு, மேற்கு போக் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (33). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவா், கடந்த 2-ஆம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றாா். மாலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 60 பவுன் தங்க நகை, 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபட்டது நேபாளத்தைச் சோ்ந்த பிரகாஷ் சிங் (26), பாசந்த் காதரி (38), பிஷ்ணு சிங் (34), கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த சுரேஷ் சாய் (30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரகாஷ் சிங், மோகன்குமாா் தந்தை நடத்திவரும் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மோகன்குமாா் குடும்பத்தினருடன் நெருக்கமான நட்பிலிருந்த பிரகாஷ் சிங், ஆள் நடமாட்டத்தை தெரிந்துகொண்டு தனது கூட்டாளிகளுடன் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.