``ICC என்றால் இந்திய கிரிக்கெட் கவுன்சிலா?'' - ICC முடிவுகளை கண்டித்த ஜாம்பவான்கள்!
வெஸ்ட் இண்டிஸ் அணியின் முன்னால் லெஜண்டரி வேகப்பந்து வீச்சாளர் ஆண்டி ராபர்ட்ஸ், இந்தியாவுக்கு சாதகமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைத்து போட்டிகளையும் இந்திய வீரர்கள் ஒரே மைதானத்தில் விளையாடியதைக் கண்டித்துள்ளார். மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ICC-ஐ இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதி என விமர்சித்துள்ளார்.
ராபர்ட்ஸ், "இந்தியா எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள முடியாது. ஐசிசி சில நேரங்களில் இந்தியாவுக்கு 'நோ' சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையும் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. இந்திய வீரர்கள் அவர்களது அரையிறுதி போட்டி எங்கு (கயானா) நடக்கப்போகிறது என்பதை முன்னதாகவே அறிந்திருந்தனர்.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா கொஞ்சம் கூட பயணம் செய்யத் தேவைப்படவில்லை. எப்படி ஒரு அணி ஒரு தொடரில் பயணம் செய்யாமல் விளையாட முடியும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 அணிகள் விளையாடிய சாம்பியன்ஸ் டிராபி தொடர், நியாயமாக நடைபெறவில்லை என்றும், இந்தியாவை எதிர்கொள்ளும் போட்டிகளுக்காகப் பிற அணிகள், பாகிஸ்தானிலிருந்து துபாய்க்குப் பயணம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டது சரியானதில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவை திருப்திப்படுத்தும் ICC
"இது நியாயமானதல்ல, இது கிரிக்கெட் அல்ல. விளையாட்டு மைதானம் இரண்டு அணிகளுக்கும் சமமானதாக இருக்க வேண்டும். எனக்குத் தெரியும் இந்தியாவிலிருந்து பெரிய அளவில் பணம் வருகிறது, ஆனால் கிரிக்கெட் ஒரு நாட்டுக்கான விளையாட்டாக இருக்கக் கூடாது. ஆனால் இப்போது ஒரு நாட்டுக்கான போட்டியாகத் தெரிகிறது. மைதானம் சமமானதாக இல்லை.
என்னைப் பொருத்தவரை ICC இந்தியன் கிரிக்கெட் கவுன்சிலாக இருக்கிறது. எல்லாவற்றையும் இந்தியாவே முடிவுசெய்கிறது. நாளை இந்தியா,'இனி கிரிக்கெட்டில் நோ பால், வைட் இருக்கக் கூடாது' எனக் கூறினால் ஐசிசி இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்கான வழிகளைத் தேடத் தொடங்கிவிடும்." எனக் கொட்டி தீர்த்துள்ளார் ராபர்ட்ஸ்.
விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியதென்ன?
முன்னதாக வெஸ்ட் இண்டிஸ் அணியின் கிர்க்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்.
"நான் அரசியல் பக்கங்கள் குறித்துப் பேச விரும்பவில்லை. ஆனால் விளையாட்டின் நிர்வாகத்தைக் கவனிப்பவர்கள் மற்றும் ஆள்பவர்கள் ஐசிசிதான், அங்கிருப்பவர்களிடம்தான் பிரச்னை உள்ளது என நினைக்கிறேன்.
இப்போது அவர்கள்தான் கிரிக்கெட்டை கவனிக்கின்றனர் என்றால், அங்கு நடக்கும் பிரச்னைகளுக்கு அவர்கள்தான் விடை கண்டறிய வேண்டும். நாம் எல்லாரையும், எதிரிகளையும் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு விஷயம் விளையாட்டு என நான் நம்புகிறேன்." என சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டியின்போது கூறியுள்ளார்.
இந்தியா சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றபிறகு மூத்த வீரர்கள் கூறும் விமர்சனங்கள் கிரிக்கெட் உலகில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
