குட் பேட் அக்லி - முதல் பாடல் எப்போது? டீசர் மேக்கிங் விடியோவில் அறிவிப்பு!
விநாயகர் தலவரலாறு: எவ்வளவு தேனை அபிஷேகித்தாலும் அப்படியே உறிஞ்சும் அதிசய விநாயகர் - திருப்புறம்பியம்
திருப்புறம்பியம்... சோழர்கள் வரலாற்றையே மாற்றி எழுதிய ஊர். கி.பி.895 - ல் விசயாலயச் சோழனின் மகன் ஆதித்த சோழன், கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி ஆகியோர் பல்லவருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்துப் போரிட்ட இடம். இந்தப் போரில் பாண்டியர்கள் தோற்றனர். கங்க மன்னன் பிருதிவிபதி இறந்தான். அபராசிதவர்ம பல்லவன் வென்றான். எனினும் ஆதித்த சோழனுக்கே பெரும்பயன் கிடைத்தது. சோழநாடு முழுவதையும் அவன் மீட்டுக்கொண்டான். சோழ தேசம் பேரரசாக உருமாற உதவிய தொடக்கப்புள்ளி திருப்புறம்பியம்.
எனவே இதற்கு சாட்சியாக, முதலாம் ஆதித்த சோழன் சாட்சிநாதேஸ்வரர் என்னும் திருக்கோயிலில் திருப்பணி செய்தான். ஏற்கெனவே செங்கற்களால் இருந்த கட்டுமானத்தை அகற்றிக் கருங்கல் கோயிலாக மாற்றினான் என்கிறது வரலாறு. இப்படி வரலாற்றுச் சிறப்பு மட்டுமல்ல புராணச் சிறப்பையும் கொண்டது சாட்சிநாதேஸ்வரர் ஆலயம். பெண் ஒருத்திக்காக இந்தத் தலத்தில் உள்ள லிங்கம், வன்னி மரம், கிணறு, மடைப் பள்ளி அனைத்தும் மதுரையில் தோன்றி சாட்சி சொன்னதாக திருவிளையாடற்புராணம் கூறுகிறது. அன்று முதல் இன்று வரை உறவுச் சிக்கல்கள் குறித்த அச்சம், பதற்றம், வழக்குகள் போன்ற குறைகளைத் தீர்க்கும் சந்நிதியாக விளங்குகிறது திருப்புறம்பியம் ஸ்ரீசாட்சிநாதர் திருக்கோயில். இவரிடம் வந்து முறையிட்டு வழக்குகள் நீங்கப் பெற்றவர்கள் பல கோடிபேர்.
அம்பிகை, கணபதி, இந்திரன், வருணன், அகத்தியர், விஸ்வாமித்ரர், புலத்தியர், சனகர், சனந்தனர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இங்கு ஈசனை வணங்கி வழிபட்ட திருத்தலம் இது.

அற்புதமான தமிழ்ப்பெயர் கொண்ட அன்னை
இங்கு அம்பிகை, 'கரும்பன்ன சொல்லி' என்ற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். கரும்பைப்போன்ற இனிய சொல்லை உடையவள் என்பது இந்தத் திருநாமத்தின் பொருள். அன்னை சொல்லும் சொல்லில் நம் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள். இந்த தேவியை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கும். அன்னைக்குத் தேனால் அபிஷேகம் செய்து வந்தால் குரல்வளம் சிறக்கும் என்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் திக்குவாய்க் குறைபாடு நீங்கும் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள்.
முருகப்பெருமானை தன் இடையில் குஹாம்பிகையை சந்நிதி மழலை வரம் அருளும் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது. இவை அனைத்தையும்விட மிகவும் சிறப்போடு திகழ்கிறது இங்கிருக்கும் விநாயகப் பெருமான் சந்நிதி.
விநாயகனே வினை தீர்ப்பவனே...
இங்கு அருளும் விநாயகருக்கு, 'ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர்' என்பது திருநாமம்.
ஒரு பிரளயத்தின்போது, சிவபெருமானின் ஆணைப்படி ஸ்ரீவிநாயகப் பெருமான் பிரளயத்தை அடக்கிக் காத்தாராம். அப்போது வருணன், கடலில் உள்ள பொருள்களான சிப்பி, சங்கு முதலானவற்றைக் கொண்டு விநாயகரை வழிபட்டானாம். பிரளயம் உண்டானபோது ஏழு கடல் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படிச் செய்தாராம் விநாயகப் பெருமான். இவ்வாறு பிரளயத்திலிருந்து ஊரைக் காத்ததால் இங்குள்ள கணபதிக்கு, 'ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர்' என்று திருப்பெயர் ஏற்பட்டது.

கோயிலின் மகா மண்டபத்துக்கு வெளியே தென்கிழக்கில் பிரளயங்காத்த விநாயகர் கோயில் உள்ளது. வெண்மையுடன் சந்தன நிறம் கொண்ட திருவுருவம். இவரது திருமேனியில் சங்கும் சிப்பியும் காணப்படுகின்றன.
திகட்டாத தேன் அபிஷேகம்
விநாயக சதுர்த்தியன்று இவருக்குக் குடம் குடமாகத் தேன் அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யும் தேன் முழுவதையும் பிள்ளையார் திருமேனி உறிஞ்சிக்கொள்கிறது. எனவே இவரைத் தேன் உறிஞ்சும் விநாயகர் என்பார்கள். மற்றைய நாள்களில் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தேன் கெட்டியான திரவம். எதன் மேல் வைத்தாலும் தேன் உறிஞ்சப்பட மாட்டாது. ஆனால், இங்கு மட்டும் தேனை முழுதும் விநாயகர் ஈர்த்துக் கொள்ளும் அற்புதம் கலியுக அதிசயம் என்றே சொல்லலாம்.
வாய்ப்புக்கிடைக்கும் அன்பர்கள் தவறாது திருப்புறம்பியம் சென்று இந்த அற்புதத்தை தரிசிக்க வேண்டும். இந்த விநாயகரை வணங்கிவந்தால் பிரளயம்போல் வரும் துன்பமும் விலகி இன்பம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயிலுக்குச் செல்வோர் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருப்புறம்பியம் போர் நடந்த இடங்களையும், கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் பள்ளிப்படைக் கோயிலையும் காண வேண்டியது அவசியம்.
எப்படிச் செல்வது ? கும்பகோணத்துக்கு வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில், மண்ணியாற்றங் கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர், இன்னம்பர் வழியாக இந்தத் தலத்தை அடையலாம்.