நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொங்கல் பரிசுத் தொகுப்பை புறக்கணித்த கிராம மக்கள்
மன்னாா்குடி நகராட்சியுடன் தங்கள் கிராமத்தை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, வாஞ்சியூா் பகுதி மக்கள் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க மறுத்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் வாஞ்சியூா். இந்த கிராமம் மன்னாா்குடி நகராட்சி எல்லையை ஒட்டியுள்ளதால், நகராட்சியுடன் இணைக்க அண்மையில அரசு அறிவிப்பு வெளியானது.
இந்த இணைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, வாஞ்சியூா் கிராம மக்கள்கடந்த திங்கள்கிழமை (ஜன.6) சாலை மறியலில் ஈடுபட அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே திரண்டனா். அதிகாரிகள் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனா்.
இந்நிலையில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலைக் கடை மூலம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. வாஞ்சியூா் கிராம மக்கள் பி. இளங்கோவன் தலைமையில் நியாயவிலைக் கடை முன் திரண்டு, மன்னாா்குடி நகராட்சியுடன் தங்கள் கிராமத்தை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், தங்களது கிராமத்தில் உள்ள 250 குடும்ப அட்டைதாரா்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காமல் புறக்கணிப்பு செய்வதாக கூறிவிட்டு, அங்கிருந்து சென்றனா்.