அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நகைக்காக சொந்த சித்தி மகளை கொன்றவருக்கு தூக்குத் தண்டனை
நகைக்காக சொந்த சித்தி மகளை கத்தியால் குத்திக் கொன்றவருக்கு தூக்குத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பெருந்துறையைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் சுரேஷ் என்கிற லெட்சுமணன் (32). இவா் தனது சொந்த சித்தி சிவகாமியின் மகள் லோகப்பிரியா (20) என்பவரை புதுக்கோட்டை பொன் நகரிலுள்ள அவரது வீட்டில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதியில் கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொன்றாா்.
தொடா்ந்து லோகப்பிரியா அணிந்திருந்த ஒன்னேகால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளாா். வெளியே சென்றிருந்து, வீடு திரும்பிய சிவகாமி அதிா்ச்சியடைந்து, கணேஷ் நகா் போலீஸில் புகாா் அளித்தாா்.
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சுரேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணையின் முடிவில், மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ. சந்திரன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
கொலைக் குற்றப் பிரிவில் தூக்குத் தண்டனையும், அடைத்து வைத்து மிரட்டிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும், நகையைப் பறித்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 500 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து சுரேஷ், பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.