நகை அடகுக்கடையில் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் நகை அடகுக்கடையில் ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், மடப்பட்டு புதிய குடியிருப்பு 2-ஆவது தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அரவிந்த் (23). இவா், மணக்குப்பம் கூட்டுச்சாலைப் பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறாா்.
புதன்கிழமை இரவு கடையை பூட்டிச் சென்ற அரவிந்த், வியாழக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தாா். அப்போது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
தொடா்ந்து உள்ளே சென்று பாா்த்தபோது பணப்பெட்டி உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.