நடிகை சௌந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை: கணவர் ரகு விளக்கம்
நடிகை சௌந்தர்யா மரணம் விபத்தல்ல என்றும், திட்டமிட்ட கொலைதான் என்றும் புகார் அளிக்கப்பட்டிருப்பது குறித்து, அவரது கணவர் ரகு விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகை சௌந்தர்யாவுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை, நடிகர் மோகன்பாபு கேட்டதாகவும், அதனைக் கொடுக்க மறுத்ததால்தான், திட்டமிட்டு ஹெலிகாப்டர் விபத்து போல ஏற்படுத்தி சௌந்தர்யா மற்றும் அவரது சகோதரரைக் கொன்றதாக புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சௌந்தர்யாவின் கணவர் ரகு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், சௌந்தர்யா மரணம் குறித்து வெளியாகும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். தங்கள் குடும்பத்தினர், சௌந்தர்யாவின் மரணத்துக்குப் பின் எந்தவிதமான சொத்தையும் நாங்கள் விற்பனை செய்யவில்லை. எங்களிடமிருந்து சட்டவிரோதமாக மேகன் பாபு எந்த சொத்தையும் பறிக்கவில்லை.
நடிகர் மோகன்பாபுவுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல நட்புறவில் இருக்கிறன். எனது மனைவி மரணம் மற்றும் மோகன்பாபு தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஏன் இந்த விளக்கம்?
நடிகை சௌந்தர்யா, தேர்தல் பிரசாரத்துக்காக ஹெலிகாப்டரில் சென்றபோது, வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மரணம் அடைந்தார்.
இந்த நிலையில், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சிட்டில்மனு என்பவர் அளித்த புகாரில், சௌந்தர்யாவுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை நடிகர் மோகன்பாபு கேட்டார். செளந்தர்யாவின் அண்ணன் அமர்நாத் நிலத்தை விற்க மறுத்துவிட்டார். இதனால்தான் இவர்கள் இருவரையும் திட்டமிட்டு ஹெலிகாப்டர் விபத்தை ஏற்படுத்தி கொன்றுவிட்டார். அவர் அந்த நிலத்தில் கட்டியிருக்கும் விருந்தினர் மாளிகையை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
1990-ஆம் ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்த சௌந்தர்யா, திருமணமாகி, கருவுற்றிருந்த நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக சென்றிருந்தபோது விபத்தில் சிக்கி பலியானார்.
ஏற்கனவே, சௌந்தர்யாவின் சொத்துகளுக்கு உரிமை கோரி, அவரது தாய், சகோதரியின் மனைவி மற்றும் பிள்ளைகள், சௌந்தர்யாவின் கணவர் என பலரும் சட்டப்போர் நடத்தி வந்தது பேசுபொருளான நிலையில், தற்போது இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.