செய்திகள் :

நமக்குள்ளே...

post image

‘சாதிவெறி’ எனும் மனநோயின் உச்சபட்ச வெளிப்பாடான ஆணவக்கொலைக்கு, சமீபத்தில் பலி கொடுக்கப்பட்டிருக்கும் மற்றுமோர் உயிர், ஐ.டி ஊழியரான 27 வயது கவின் செல்வகணேஷ்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவரான கவின், அதே பகுதியில் வசிக்கும் வேறு சாதியைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன்- கிருஷ்ணகுமாரியின் மகள் சுபாஷினியைக் காதலித்தார். இதற்காக, அந்தப் பெண்ணின் தம்பி சுர்ஜித்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் தம்பதி பணியிடை நீக்கம் செய்யப்பட, சுர்ஜித் மற்றும் அவருடைய அப்பா சரவணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சுர்ஜித், சரவணன் மற்றும் கிருஷ்ண குமாரி... தீவிரவாதிகளோ, சமூகவிரோதிகளோ இல்லை. நம் வீடுகளைப் போலத்தான், அந்தப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்கள். ஆனால், இன்று... மகன் கொலை குற்றவாளி, பெற்றோர் கொலைக்கு உடந்தை, மகள் பாதிக்கப்பட்டவர் என்ற நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். காரணம்..? சாதிவெறி.

சுர்ஜித்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அரிவாள், கத்திகளுடன் அவர் இருக்கும் படங்கள் குவிந்து கிடக்கின்றன... ஆதிக்க சாதிவெறி கேப்ஷன்களுடன். இன்னொரு பக்கம், விளையாட்டில் ஆர்வம்கொண்ட சுர்ஜித், அதில் வென்றுள்ள பதக்கங்கள், கோப்பைகளின் படங்களும் பகிரப்பட்டுள்ளன. ஆக... சுர்ஜித் முன்பாக சாதிவெறி, ஸ்போர்ட்ஸ் என இரண்டு தேர்வுகள் இருந்துள்ளன. சாதிவெறியைத் தேர்ந்தெடுத்ததால், இன்று குடும்பமே வாழ்க்கை யைத் தொலைத்து நிற்கிறது. மற்றொரு குடும்பம், ஓர் உயிர் பறிக்கப்பட்டதால், துடிதுடித்துக் கொண்டிருக்கிறது.

நிலவரம் என்னவெனில், முந்தைய தலைமுறைகளைவிட இப்போது அதிவேகத்தில் டிஜிட்டல் தளங்களில் சாதி ஒருங்கிணைக்கப்படுகிறது. சாதியை வளர்க்கும் சோஷியல் மீடியா பக்கங்கள் முளைத்துக் கொண்டே உள்ளன. அதில் உள்ளிழுத்துப் போடப்படுபவர்கள் எல்லாம் பெரும்பாலும் இளைஞர்கள் என்பது, நாளைய சமுதாயம் குறித்த ஏமாற்றத்தையும் அச்சத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. அவர்கள் எல்லாம் வேறு யாரும் அல்ல தோழிகளே... நம் தம்பிகள், மகன்கள், மகள்கள் மற்றும் உறவுகள்தான்.

அதே சமூக வலைதளத்தில்தான், `பரிதாபங்கள்’ யூடியூப் சேனலில் கோபி, சுதாகர், டிராவிட் கூட்டணி இந்த ஆணவக்கொலையையும், ஆதிக்கசாதியினரின் வெறியையும் பகடி செய்து வீடியோ பதிவிட்டுள்ளனர். மூன்றே நாள்களில் 55 லட்சம் பார்வைகள், கிட்டத்தட்ட 35,000 கமென்ட்கள் என்று சமூக மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த வீடியோ, ஒரு முக்கிய சமூகப் பங்களிப்புப் படைப்பு. ஆம்... இளைஞர்கள் கேட்கத் தயாராக உள்ளனர். அவர்களுக்கு யார், என்ன சொல்கிறார்கள், எது போய்ச் சேர்கிறது என்பதுதான் முக்கியம் இங்கே.

‘நம்ம சாதிப் பெருமை தெரியுமா..?’ என்றெல்லாம் இளம்நெஞ்சங்களிடம் ‘சாதிய ஆதிக்கம்’ என்கிற நஞ்சு விதைக்கப்படக் கூடாது. மாறாக, அவர்களுக்கு சமூகநீதி பற்றிச் சொல்லி, கல்வியறிவைக் கொடுத்து, வாழ்வில் முன்னேற்றுவதுதான் பெற்றோர்களின் பொறுப்பு. அதுதானே தோழிகளே, நாளைய சமூக முன்னேற்றத்துக்கான நம் ஒவ்வொருவருடைய உண்மையான பங்களிப்பாக இருக்கும்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்