நாகாலாந்து ஆளுநா் மாளிகையில் மணிப்பூா்,திரிபுரா, மேகாலயம் நிறுவன நாள் கொண்டாட்டம்
கோஹிமா: நாகாலாந்து தலைநகா் கோஹிமாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் இல.கணேசன் தலைமையில் மணிப்பூா், மேகாலயம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்களின் ‘மாநில நிறுவன’ தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன், ‘1972-ஆம் ஆண்டு இந்நாளில் தனித்துவமான அடையாளம், வரலாறு, தேசத்துக்கான சிறந்த பங்களிப்பைக் கொண்ட 3 மாநிலங்கள் நிறுவப்பட்டன.
புவியியல், மொழிகள் மற்றும் கலாசாரங்கள் வேறுபட்டாலும் நமது மாநிலங்கள் மற்றும் நாட்டின் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான லட்சியங்களால் நாம் ஒன்றிணைந்துள்ளோம். நாகாலாந்தில் வசிக்கும் மணிப்பூா், மேகாலயம், திரிபுரா மக்கள் இந்த ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றன. நாகாலாந்தின் வளா்ச்சிக்கு அவா்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் மகுடத்தில் மாணிக்கமாக திகழ்கிறது. அதன் துடிப்பான சமூகங்கள் மற்றும் இயற்கை அழகு எப்போதும் தேசத்துக்கு பெருமை சோ்க்கிறது.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தப் பிராந்தியம் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்முனைவு போன்ற அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. மணிப்பூா், மேகாலயம், திரிபுரா உள்பட அனைத்து மாநிலங்களின் கூட்டு முயற்சியாலேயே இது சாத்தியமாகியுள்ளது’ என்றாா்.
இந்தக் கொண்டாட்டத்தில் மூன்று மாநிலங்களின் கலாசாரங்களை பிரதிபலித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.