நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: அதானி விவகாரம் புயலைக் கிளப்பும்?
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (நவ.25) தொடங்குகிறது.
நாட்டில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபா் கெளதம் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சில தினங்களுக்கு முன்னா் குற்றம்சாட்டப்பட்டது.
பிரதமா் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள இந்த விவகாரம், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் வலுவாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.
இதேபோன்று, மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதால், இந்த விவகாரத்தையும் எதிா்க்கட்சிகள் தீவிரமாக எழுப்பக் கூடும். திங்கள்கிழமை தொடங்கும் குளிா்கால கூட்டத் தொடா், டிச. 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
16 மசோதாக்கள்: இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதற்காக வக்ஃப் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்கள் மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதில், தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க வகைசெய்யும் மசோதா, வா்த்தக கப்பல் போக்குவரத்து மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா உள்ளிட்ட 5 மசோதாக்கள் புதியவை. வக்ஃப் திருத்த மசோதா, முசல்மான் வக்ஃப் (ரத்து) மசோதா உள்பட 8 பிற மசோதாக்கள் மக்களவையில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் இருப்பவையாகும்.
பாரதிய வாயுயான் விதேயக் உள்ளிட்ட 3 மசோதாக்கள், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்கள், பரிசீலனை-நிறைவேற்றத்துக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
காலக்கெடு நீட்டிக்கப்படுமா?: வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் இது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இக்குழுவின் அறிக்கை, குளிா்கால கூட்டத் தொடரின் முதல் வாரத்துக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு தாக்கலான பிறகு, பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காக வக்ஃப் திருத்த மசோதா கொண்டுவரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேநேரம், வக்ஃப் தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கோரியிருந்தனா். இந்தக் கோரிக்கை குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க சட்ட ரீதியில் வழிவகை உள்ளது. தற்போதைய நிலையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து விவாதித்து முடிவெடுக்க மக்களவை அலுவல் ஆய்வுக் குழுவே சரியான தளம்’ என்றாா்.
காங்கிரஸ் வேண்டுகோள்: மத்திய அரசு பதில்
‘நாடாளுமன்றத்தில் பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்த நிலையில், ‘இரு அவைகளிலும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து அலுவல் ஆய்வுக் குழுக்கள் முடிவு செய்யும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குளிா்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் நோக்கில், மத்திய அரசின் அழைப்பின்பேரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) நடைபெற்றது.
பாதுகாப்புத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 30 கட்சிகளைச் சோ்ந்த 42 தலைவா்கள் பங்கேற்றனா்.
மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய், மாநிலங்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் பிரமோத் திவாரி, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, அகாலி தளத்தின் ஹா்சிம்ரத் கெளா், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி எம்.பி. அருண் பாா்தி, தெலுங்கு தேசத்தின் ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, ஜனசேனையின் பாலசெளரி வல்லபனேனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் பேசிய மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய், ‘அதானி விவகாரம், தீவிரமான மோசடி. எனவே, நாடாளுமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும். எந்தக் காரணத்தைக் குறிப்பிட்டும், எங்களின் கோரிக்கையை மத்திய அரசு மறுக்கவோ, புறக்கணிக்கவோ கூடாது. ஏனெனில், இந்த விவகாரம் இந்திய நிா்வாக அமைப்புகள் மற்றும் முதலீட்டாளா்கள் தொடா்புடையது’ என்றாா்.
நாடாளுமன்றத்தின் பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, அதானி விவகாரம் குறித்து முதலில் விவாதிக்க வேண்டுமென மாநிலங்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் பிரமோத் திவாரி வலியுறுத்தினாா்.
மத்திய அரசு வேண்டுகோள்: கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு , ‘நாடாளுமன்ற அலுவல்கள் சுமுகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு, அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இரு அவைகளிலும் எடுத்துக் கொள்ளப்படும் விவகாரங்கள் குறித்து அவைத் தலைவா்களின் ஒப்புதலுடன் அலுவல் ஆய்வுக் குழுக்கள் முடிவெடுக்கும்’ என்றாா்.
அரசமைப்பு ஏற்பு தினம்: நாளை சிறப்பு அமா்வு
நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமா்வு செவ்வாய்க்கிழமை (நவ.24) நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி ஆகியோா் பங்கேற்பாா்கள் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
அரசமைப்புச் சட்டத்தின் சம்ஸ்கிருதம், மைதிலி மொழி பதிப்புகள் மற்றும் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படவுள்ளது. அத்துடன், ‘அரமைப்புச் சட்ட உருவாக்கம்: ஒரு பாா்வை’, ‘அரசமைப்புச் சட்ட உருவாக்கமும் அதன் பெருமைமிகு பயணமும்’ என்ற இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன.
பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில், கடந்த 1949, நவம்பா் 26-ஆம் தேதி அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டது. 1950, ஜனவரி 26-ஆம் தேதி அரசமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டது.