செய்திகள் :

`நான் வேற மாதிரி கறுப்பன்' - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 7

post image
‘சூதாட்டத் தொழில் ஈடுபட்டு மனம்திருந்தி திரும்பினாலும், அந்தப் பாவக் கறை எப்போதும் அழியாது’ என்ற குற்றப் பார்வை லூயிஸ் மிஷாவ் மீது படிந்திருந்தது.

தேவாலயப் பணிகளில் இருந்து விலக இது காரணமாக இருக்கலாம் என்பதால், “பாதிரியார் லைட்ஃபுட்டின் மனைவி அதாவது உங்கள் அண்ணனின் மனைவி மேரி, உங்களைச் சிறுமைப்படுத்தியதால் தேவாலயப் பணிகளைக் கைவிட்டு விட்டீர்கள், அப்படித்தானே… இது ஏதாவதொரு தொழிலைச் செய்ய அல்லது வேலைக்குப் போக உங்களை நிர்ப்பந்தித்திருக்கும். அப்போதுதான் புத்தகக் கடை வைக்கும் சிந்தனை ஏற்பட்டதா?” எனக் கேட்டேன்.

“மேரி அவர்களின் நிராகரிப்பு மட்டும் தேவாலயப் பணிகளை விட்டு வெளியேற காரணமில்லை. சராசரி மனிதனைப் போல நானும் இருந்தால் என்ன செய்திருப்பேன்? போட்டிக்கு நானும் ஒரு தேவாலயம் தொடங்கியிருப்பேன். கடவுள் மேல் நம்பிக்கை வைத்தேன். அண்ணனை நேசித்தேன். அதெல்லாம் எனக்கு பிரச்னையே இல்லை. ஒரு உண்மையை ஒத்துக்கணும். அண்ணனும் என்னை நன்றாகவே வைத்திருந்தார், நானும் அங்கு நிம்மதியாகத்தான் இருந்தேன். அதேசமயம், தேவாலயப் பணி எனக்கானது இல்லை என என் உள் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. மதமோ அண்ணனோ என்னைக் கட்டுப்படுத்த நான் விரும்பல. என்னுடைய தனித்தன்மையை இழக்கக் கோரும் எந்த மதமும் எனக்கு தேவையில்லை அப்டிங்கிற கொள்கை என் உள்ளத்துல ஆழமா பதிந்திருந்தது. அதுல நான் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருந்தேன்.

“அண்ணனும் அவருடைய மனைவியும் என் மனைவியும் என்னை மாற்ற விரும்பினார்கள். எதிலிருந்து என்னை மாற்ற விரும்புகிறார்கள்? எனக்கு புரியவில்லை. அவமானப்படுத்துவதைத் தவிர. அதனால் தேவாலயப் பணியிலிருந்து விலகுவது எனத் தீர்மானித்தேன். நியூயார்க் மாகாணத்தின் ஹார்லெம் நகரத்திற்கு போகலாமென முடிவெடுத்தேன். நியூயார்க் பக்கத்துல போர்ட் செஸ்டர் நகரத்தில் என்னுடைய சகோதரி மார்கரெட், அப்பாவோட சகோதரி - அத்தையும் அங்கிருந்தனர். அங்க போவது சரியெனப் பட்டது. கறுப்பர்கள் அதிகமாக வசிக்கும் ஹார்லெம் நகரம் ஒருவித ஈர்ப்பை எனக்குள் ஏற்படுத்தியது.

லூயிஸ் மிஷாவ்

“ஆனால், அண்ணன் என்னை விடுவதாக இல்லை. அவரோட மனைவிக்குப் பிடிக்கலன்னாலும் அவரோடயே என்னை வைத்துக்கொள்ள விரும்பினார். அந்த நேரத்துல அண்ணன் லைட்ஃபுட் தேவாலயப் பணியையும் தாண்டி கறுப்பர்களின் முன்னேற்றத்திற்கான ஓர் அருமையான பணியை முன்னெடுத்து வந்தார். வர்ஜீனியாவுல 500 ஏக்கர் நிலத்தை வாங்கி, கறுப்பர்களை அங்கு ஒரே இடத்தில் மொத்தமாக குடியமர்த்தும் நடவடிக்கையில் இறங்கினார். இதற்காக குறைவான விலையில் நிலத்தை விற்பனை செய்தார். ஏன் வர்ஜீனியாவைத் தேர்ந்தெடுத்தார் தெரியுமா?” நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்த மிஷாவ், என்னிடம் கேட்டார். ஒரு இடைவெளி எடுத்துக்கொள்ள விரும்பினார்போல.

சட்டென கேட்கவும் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அமெரிக்காவில் கறுப்பர்களுக்கான முன்னேற்றத்தில் பாதிரியார்களின் பங்கை பிற்காலத்தில் அறிய முடிகிறது. அது பற்றி படித்திருக்கிறேன். ஆனால், 1930களிலேயே இத்தகைய முயற்சி எடுக்கப்பட்டது எனக்கு வியப்பாக இருந்தது. அதானே… பாதிரியார் லைட்ஃபுட் ஏன் வர்ஜீனியாவைத் தேர்வு செய்தார்? கணநேர சிந்தனைக்குப் பின் உதட்டைப் பிதுக்கித் தெரியாதென ஒப்புக்கொண்டேன்.

“வெள்ளையர்கள் அமெரிக்காவில் முதலில் குடியேறிய இடம் வர்ஜீனியாதான். 1607-ஆம் ஆண்டு, வர்ஜீனியாவில் உள்ள ஜேம்ஸ்டவுன் என்ற பகுதியில்தான் ஆங்கிலேயர்களின் காலனி நிரந்தரமாக அமைக்கப்பட்டது. கறுப்பர்கள் அமெரிக்காவில் அடிமையாக நடத்தப்பட்ட முதல் இடமும் அதுதான். அதனால்தான் அந்தப் பகுதியை அண்ணன் தேர்வு செய்தார். கறுப்பின தலைவர்களின் தற்சார்பு பொருளாதாரக் கொள்கைக்கு செயல் வடிவம் கொடுக்கும் இந்தத் திட்டத்துக்கு, ‘அமெரிக்க கறுப்பர்கள் முன்னேற்ற தேசிய நினைவகம்’ (National Memorial to the Progress of the Colored Race in America) எனப் பெயர் வைத்தார். அந்த நிலத்தில் விவசாயப் பண்ணையும் இருந்தது.

“நிலத்தை விற்பதற்காக, ஹார்லெம் நகரின் ஏழாவது அவென்யூவில் இயங்கி வந்த அலுவலகத்தில் என்னை வேலை பார்க்கச் சொன்னார். இந்த இடம் என் வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறும் என நான் அப்போது நினைக்கவில்லை.  “ஆனா, அண்ணன் எதிர்பார்த்தது போல, ரியல் எஸ்டேட் பிசினஸ் நடக்கவில்லை. சுமார் 650 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிபெயர்ந்து சென்று, வர்ஜீனியாவில் நிலம் வாங்கி வசிக்க, நியூயார்க்கின் ஹார்லெம் நகரில் வாழ்ந்து வரும் கறுப்பர்கள் விரும்பவில்லை. அதுவுமில்லாம, அவர்களுக்கு விவசாயம் செய்யவும் தெரியாது. அதனால ரியல் எஸ்டேட் பிசினஸ் அலுவலகத்தை மூடும் எண்ணத்துக்கு வந்தார் அண்ணன்.

“நியூபோர்ட் நியூஸ் நகரில் தேவாலயப் பணியில ஈடுபட்டிருந்த போது என்னுடைய மனதை அறுத்துக் கொண்டிருந்த விஷயம், இங்கு வந்த பின்பு ஆழமான விதையாக என்னுடைய உள்ளத்தில் ஊன்றியது. கறுப்பர்களோடு நெருங்கிப் பழகி, அவர்களின் உளவியலைத் தெரிந்து கொள்ள ரியல் எஸ்டேட் வேலை நல்ல களமாக எனக்கு அமைந்தது. “எங்களுடைய திட்டத்தின் குறிக்கோளை கறுப்பர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அந்தக் காலக்கட்டத்தில், அமெரிக்க பொருளாதாரம் Great Depression என்று சொல்லக்கூடிய பெரும் மந்தநிலையைச் சந்தித்து, அப்போதுதான் மெதுவாக மேல் நோக்கி எழுந்து கொண்டிருந்து. இந்த லட்சணத்தில் கறுப்பர்களின் பொருளாதார நி்லையைச் சொல்லணுமா? பழைய நல்ல நாட்களையே கறுப்பர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர், சிறப்பான எதிர்காலத்தை அமைப்பதற்கான திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை.

“கறுப்பர்கள் ஏன் வெற்றி முகட்டை தொடுவதில்லை என, அப்போது என்னிடம் கேட்டிருந்தால், வெள்ளையனின் அடக்குமுறைதான் காரணம் என்று சொல்லியிருப்பேன். ஆனால், ஹார்லெம் நகருக்கு வந்த பின்னாடிதான் கறுப்பர்கள் தங்களைப் பற்றி அறிந்து கொள்ளாததும் அவர்களின் மோசமான நிலைமைக்கு ஒரு காரணம் எனப் புரிந்தது.

லூயிஸ் மிஷாவ்

“ஒருவன் தன் வரலாற்றை அறியாமல் இருப்பது குற்றமல்லவா? ஒரு மனிதன் எங்கிருந்து வந்தான் என்று தெரியாவிட்டால், அவன் எங்கே போகப் போகிறான் என்பதும் அவனுக்குத் தெரியாது. உங்கள் மதிப்பு என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் உழைப்புக்கு என்ன ஊதியம் நிர்ணயிப்பது என்பதும் உங்களுக்குத் தெரியாது. உங்கள் நிலையை மேம்படுத்துவதற்கு முன், நீங்கள் யார் என்பதை முதலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

“நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரிகிறதா இவா? அறிவு. இதுதான் கறுப்பர்களுக்கு இன்றைய தேவை. இந்தத் தேவைதான் விதையாக என் ஆழ் மனதில் ஊன்றி கிடந்தது. நீக்ரோ என ‘அழைக்கப்படுபவர்களில்’ நானும் ஒருவன் அல்ல. அழைக்கப்படுபவர்கள் என நான் ஏன் சொல்கிறேன் என்றால், நீக்ரோ என்பது ஒரு பொருள். நபர் அல்ல. இந்த வார்த்தை ஒரு கண்டுபிடிப்பு. நீக்ரோ என்ற பொருள் மூலம்தான் கறுப்பன் தவறாகப் பயன்படுத்தப்படுகிறான், குற்றம்சாட்டப்படுகிறான், நிராகரிக்கப்படுகிறான். இந்த நிலை ஏற்பட்டதற்கு கறுப்பனுடைய பங்கும் இருக்கிறது. இதை ஏற்றுக் கொண்ட கறுப்பன் முன்னேறவே இல்லை. இப்படி நீக்ரோ என அழைக்கப்படுபவர்களால்தான் அடிமைத்தனம் நிலைநிறுத்தப்பட்டது.”

கறுப்பின எழுச்சி குறித்த ஆய்வரங்கு ஒன்றில் பங்கேற்ற அறிஞர் ஒருவரின் கருத்தியல் சித்திரத்தை கேட்டதைப் போல உணர்ந்தேன். மிஷாவ் அவர்களின் அங்கதம் பற்றியே அதிகமும் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அவர் பேராசிரியர் என அழைக்கப்படுவதற்கு காரணமே அவரின் அறிவுக்கூர்மைதான் என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். மிகப் பொருத்தமான விளிச்சொல்தான் பேராசிரியர் என்பது.  

பக்கங்கள் புரளும்

மதன் எழுதிய Blockbuster தொடர் 'வந்தார்கள் வென்றார்கள்'.. இப்போது Audio வடிவில் | Vikatan Play

ஆண்டியாக இருந்தாலும் சரி, அலெக்ஸாந்தராக இருந்தாலும் சரி, வடக்கிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்துக்குள் நுழைய வேண்டுமென்றால் - விண்ணை முட்டும் இமயமலைத் தொடரைத் தாண்டியாக வேண்டும். அல்லது வெள்ளம் பெருக்... மேலும் பார்க்க

சிறை, கடவுள் நம்பிக்கை, பேராசிரியர் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 6

ஒரு கண் பார்வை இழந்த, அந்த கசப்பான தருணங்களை விவரித்த புரஃபஸர் மிஷாவ், தன்னோட அண்ணன் தனக்கு உதவி செய்ததாகச் சொல்லியதை, எப்படி உதவினார் என விரிவாக கூற மறந்து விட்டு, அடுத்த கேள்வியை என்னிடமிருந்து எதிர... மேலும் பார்க்க

`மகாகவியென்றாலே பேராற்றல், பேரதிசயம்...' - வியக்கும் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி!

மகாகவி என போற்றப்படும் பாரதியாரின் 143 பிறந்தநாளான நேற்று தமிழகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர். பாரதியின் முழு படைப்பு தொகுப்புகளை பிரதமர் நரேந்... மேலும் பார்க்க

Book Review: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகம் குறித்த விசிக எம்.பி ரவிக்குமாரின் விமர்சனம்

'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் குறித்து எழுத்தாளரும், விசிக-வின் பொதுச்செயலாளருமான எம்.பி ரவிக்குமார் பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அந்தப் பதிவில், " விகடன் பிரசுரமும்... மேலும் பார்க்க

`எனக்கு இன்னொரு பேர் இருக்கு!'; மிஷாவ்வின் சூதாட்ட சாம்ராஜ்யம் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 5

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க கறுப்பர்களிடையே மார்கஸ் கார்வேயின் இயக்கம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.மறுபுறம் கறுப்பர்களுக்கு எதிரான வன்மமும் வெள்ளையர்களின் மத்தியில் அதிகரித்திருந்... மேலும் பார்க்க

கறுப்பர்களின் மோசமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?- ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 4

“வெள்ளைக்காரர்களைப் பற்றிய கறுப்பர்களின் மதிப்பீடு இரண்டு வகையாக இருக்கும்.ஒன்று, வெள்ளையர்களைப் போல நாமும் மாற வேண்டும் என்ற ஆசை. இன்னொன்று, வெள்ளையர்களின் இவ்வளவு பிரமாண்ட வளர்ச்சிக்குப் பின்னால் இர... மேலும் பார்க்க