சிறை, கடவுள் நம்பிக்கை, பேராசிரியர் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 6
ஒரு கண் பார்வை இழந்த, அந்த கசப்பான தருணங்களை விவரித்த புரஃபஸர் மிஷாவ், தன்னோட அண்ணன் தனக்கு உதவி செய்ததாகச் சொல்லியதை, எப்படி உதவினார் என விரிவாக கூற மறந்து விட்டு, அடுத்த கேள்வியை என்னிடமிருந்து எதிர்பார்த்து அமைதியாக இருந்தார்.
“சாத்தானின் தோழரான தம்பி மிஷாவ்வுக்கு, தேவனின் ஊழியரான அண்ணன் லைட்ஃபுட் எப்படி உதவினார், அதைச் சொல்ல வந்த நீங்க, சொல்ல மறந்துட்டீங்களே…” நினைவுபடுத்தினேன். “ஆமா, அதச் சொல்ல மறந்துட்டேன்ல. நான் போலீஸில் சிக்கி இக்கட்டான நிலையில் இருப்பதை அறிந்த அண்ணன், நேராக கோர்ட்டுக்கே வந்துட்டாரு. அவர் ஒரு பாதிரியார் என்பதால், அவருடைய கண்காணிப்பின் கீழ் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி சம்மதித்தார். அப்போ எனக்கு 30 வயசிருக்கும். மீண்டும் குடும்பத்தினரோடு இணையும் வாய்ப்பு மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கை உள்ளவனாக மாறுவதற்கான வாய்ப்பாகவும் அது அமைந்தது.
“அந்த சமயத்துல அண்ணனோட, Church of God தேவாலயம் பல்வேறு நகரங்களிலும் கால் பதித்திருந்தது. அண்ணனோட பிரசாரம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்ததால் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டது. நாங்கள் வசித்த நியூபோர்ட் நியூஸ் நகரிலும், ஹாம்ப்டன், பால்டிமோர், ஈடன்பார்ன், இது தவிர தலைநகர் வாஷிங்டன் நகரத்திலும் தேவாலயம் தொடங்கப்பட்டது. நியூயார்க், ஃபிலடெல்பியா நகரங்களில்கூட தேவாலயம் தொடங்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்து வந்தன. எங்கள் வீடு இருக்கும் ஜெஃபர்ஸன் அவென்யூவில் சின்ன குடிசையில் தொடங்கப்பட்ட Church of God தேவாலயம், இப்படி அதிரடியான வளர்ச்சி அடையும்னு யாராவது நினைச்சிருப்பாங்களா?” ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பக்தர் போல மிஷாவ் பூரிப்பில் வியந்தார்.
“ஜெயிலுக்குள் போகாமல் இருக்க அண்ணன் உதவவும், உங்களுக்கும் கடவுள் நம்பிக்கை வந்துடுச்சா? தேவாலயப் பணிகளில் ஈடுபட்டீர்களா?” நாத்திகரான அவரிடம் இப்படிக் கேட்டவுடன் கோபப்படுவாரோ என சிறு அச்சத்தோடு, ஒருவித கிண்டல் தொனியில் பார்த்தேன். “அப்படிச் சொல்லிட முடியாது. ஒரு வேலை வேண்டும். அதனால, தேவாலயப் பணிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். தொடக்கத்தில் என்னை ஏற்றுக்கொள்ள, தேவாலயத்தில் பணிபுரிந்த மற்ற ஊழியர்கள் தயங்கினர். அதனை நான் புரிந்துகொண்டேன். தீய வழிகளில், மத விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த என்னை அவர்கள் உடனே ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாதுதானே… அதேசமயம், என்னுடைய இங்கிதமான செயல்பாடுகளாலும், கனிவான பேச்சுக்களாலும் என்னை அங்கீகரித்து ஊழியக்காரனாக ஏற்றுக்கொண்டனர்.
“தேவாலயப் பணிகளில் அர்ப்பணிப்புடன் நான் செயல்பட்டதால், எல்லோருக்கும் என்னைப் பிடித்துப் போய் விட்டது, ஒரேயொரு நபரைத் தவிர. என்னுடைய அண்ணன் லைட்ஃபுட்டின் மனைவி மேரிக்கு என்னை அடியோடு பிடிக்கவில்லை. நான் திருந்தினாலும், நான் செய்த பாவச் செயல்கள் என்னோடேயே இருக்கின்றன என அவர் கருதினார். கிறிஸ்தவ மதம் அப்படித்தான் சொல்வதாக அவர் ஆணித்தரமாக நம்பினார். அதனால், என்னை எல்லா வகையிலும் தரக்குறைவாக நடத்தி வந்தார். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை.
“இந்தச் சூழ்நிலையில்தான், எனக்குத் திருமணம் செய்துவைக்கத் தீர்மானித்து, அதற்கான ஏற்பாடுகளை அண்ணன் செய்தார். 34 வயதில் எனக்குத் திருமணம் நடைபெற்றது. அண்ணனின் தேவாலயத்தில் வேலை பார்த்த சகோதரி வில்லி ஆன் ஆலன் (Willie Ann Allen) என்பவரைத் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டது. அண்ணனைப்போல, அண்ணன் மனைவியைப் போல, வில்லியும் கிறிஸ்தவ மதத்தில் அதிதீவிர ஈடுபாடு கொண்டவர். நானும் தேவாலயப் பணிகளில் எந்தக் குறையும் சொல்லாத வகையில் ஈடுபாட்டோடு இயங்கி வந்தேன்.
“இந்த சமயத்துல ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியாகணும். தேவாலயத்தில் பணி செய்வதில் எனக்கிருந்த உடன்பாட்டை அப்போதுதான் புரிந்து கொள்ள முடியும். ஒரு தடவை அண்ணன் லைட்ஃபுட் மிஷாவ், வீதிகளில் தேவனின் செய்திகளை பாடலாக பாடிச் சென்று காவல் நிலையப் படிகளை மிதிக்க வேண்டி ஏற்பட்டதால், மகிழ்ச்சி அடைந்ததாக ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா…
“அப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடைபெற்றது. ஆனால், இந்த முறை நான் மகிழ்ச்சியடையவில்லை. இனப் பிரச்னையில் ஈடுபட்டதாகக் கூறி, அண்ணனை போலீசார் கைது செய்தனர். வெள்ளையர்களையும் கறுப்பர்களையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, ஞானஸ்நானம் வழங்கியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டதால், போலீஸ் கைது நடவடிக்கையில் இறங்கியது.
“இது எனக்கு ஆத்திரமூட்டியது. வர்ஜீனியா மாகாண அரசாங்கத்தில் வெள்ளை இனவாதிகளின் ஆதிக்கத்தை இது அப்பட்டமாகக் காட்டியது. அமெரிக்க மத்திய அரசாங்கம் இனப் பாகுபாட்டுக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், ஒரு சில மாகாண அரசுகள் வெளிப்படையாகவே கறுப்பர்களை இனப்பாகுபாட்டோடு நடத்தின. மாகாண அரசுகள் மத்திய அரசின் சட்டதிட்டங்களைக் கறாராகக் கடைபிடிக்கணும்னு கட்டாயம் கிடையாது. வெள்ளை இனவாதிகளைக் கொண்ட கூ க்ளக்ஸ் கிளான் (Ku Klux Klan) போன்ற அமைப்புகள்தான் இப்படி மாகாண அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்தன.”
மிஷாவ்வின் விவரணைகள் எனக்கு சலிப்பை ஏற்படுத்தின. புத்தகக் கடையை எப்போது திறந்தார், அந்தச் சிந்தனை அவருக்குள் எப்படி வந்தது என்பதை அறிய ஆர்வமாக இருந்தேன். அவருடைய தொடக்க கால வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக பீடிகை போல சில கேள்விகளைக் கேட்டேன். அவர் கடவுள் மறுப்பாளராக செயல்பட்ட விதம் அதற்கு நேரெதிராக மீண்டும் கடவுள் நம்பிக்கையாளராகத் தேவாலயப் பணிகளில் ஈடுபட்டது என சுவாரஸ்யமாகத்தான் நேர்காணல் சென்றது. இருந்தாலும், வாசகர்களின் ஆர்வத்திற்குத் தடை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இடையீடு செய்தேன்.
“உங்களுடைய இரண்டாவது அத்தியாயம் எப்போது, எப்படி முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து உடனே புத்தக விற்பனை நிலையத்தைத் தொடங்கி விட்டீர்களா? இதுவரைக்கும் நான் செய்த நேர்காணலில் மிஷாவ் என்ற பாவம் செய்து திருந்திய மனிதரைத்தான் பார்க்க முடிகிறது. எப்போது பேராசிரியர் என்ற அந்தப் போராளிக்கான விதை தூவப்பட்டது?” நேரடியாக விஷயத்திற்கு வருவதற்காக அவரை அவசரப்படுத்தும் தோரணையில் வினவினேன்.
“தேவனின் பாதையில் போன என்னுடைய தேவாலயப் பணியும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரத்தான் செய்தது. எனக்கு இந்தப் பணி பிடிக்காமல் இல்லை. ஆனால் தேவாலயப் பணியை விட்டு விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
“என்னை மட்டம் தட்டும் வகையில், அண்ணி மேரி தொடர்ந்து நடந்துகொண்டார். மற்ற ஊழியர்களிடமும் என்னைப் பற்றி தப்பான அபிப்ராயத்தை உருவாக்கினார். ஒரு முறை அண்ணனின் பிரசங்கத்தின்போது, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக காட்டுவதற்காக என்னை மேடைக்கு அழைத்து, பைபிளைக் கையில் தந்து தீத்துவின் முதல் அதிகாரத்தில் உள்ள 15வது வசனத்தை, அனைவர் முன்பாகவும் வாசித்துக்காட்டச் சொன்னார்.
சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
“நான் இன்னும் தூய்மையடையாதவன்தான் என்பதை பிறருக்கு தெரியப்படுத்துவதற்காக, என்னுடைய வாயாலேயே அதை ஒப்புக் கொள்ளச் செய்ய நிர்ப்பந்தித்தார். நான் உடன்படாமல், பைபிளை வாசிக்க முடியாது என்று சொல்லி விட்டேன். அண்ணனும் விடாப்பிடியாக மனைவியின் பேச்சைக் கேட்டு கட்டாயப்படுத்தவும், நான் உறுதியாக மறுத்து விட்டேன். இது புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்தது.”
- பக்கங்கள் புரளும்