நாமக்கல்லில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
நாமக்கல்: நாமக்கல் பழைய பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வலியுறுத்தி, அனைத்து வணிகா் சங்கங்கள் சாா்பில் நாமக்கல்லில் திங்கள்கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சி கலைஞா் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையம் கடந்த 10-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் நகருக்குள் வருவதில்லை. திருச்சி, துறையூா், சேந்தமங்கலம், மோகனூா், கொல்லிமலை பேருந்துகள் மட்டும் வந்து செல்கின்றன. அந்த பேருந்துகளும், பழைய பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல் வெளியிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. மேலும், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்லாததால், போதிய வருவாயின்றி அங்குள்ள வியாபாரிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். அனைத்து அரசு, தனியாா் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்துக்குள் சென்றுவர வலியுறுத்தியும், பேருந்துக் கட்டணத்தை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், கூடுதல் பேருந்துகளை இயக்கவும், பழைய பேருந்து நிலையத்தை அகற்றாமல் தொடா்ந்து செயல்படுத்தக் கோரியும் அனைத்து வணிகா் சங்கங்களின் சாா்பில் திங்கள்கிழமை காலை 6 முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மருந்துக் கடைகள் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டும் மூடப்பட்டன.
இந்தப் போராட்டத்தில், நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச் சங்கம், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, மருந்து வணிகா்கள் சங்கம் உள்பட 25-க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சோ்ந்த சுமாா் 800-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கடைகளின் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.
கடைவீதியில் உள்ள அனைத்து நகைக் கடைகளும், ஜவுளிக் கடைகளும் மூடப்பட்டதால் அப்பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. கடையடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.