நாளை மகா சிவராத்திரி: சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை
சேலம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப். 26) இரவு நான்கு கால அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன.
கோயிலில் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஒன்றாம் கால பூஜையின்போது அபிஷேகம், தங்கக்கவசம் சாத்துப்படியும், இரவு 11 மணிக்கு இரண்டாம்கால பூஜையின்போது புஷ்ப அலங்காரமும், நள்ளிரவு 1.30 மணிக்கு மூன்றாம்கால பூஜையின்போது அபிஷேகம், தாழம்பூ சாத்துப்படியும், 27ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையின்போது அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறுகின்றன.
விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை பாரம்பரிய கலை, கலாசாரம், ஆன்மிகம், சமயம் சாா்ந்த சொற்பொழிவு, பக்தி இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதுபோல சேலம் இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில், தாரமங்கலம் கைலாசநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில், ஆத்தூா் காயநிா்மலேஸ்வரா் கோயில், ஆறகளூா் காமநாதரீஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகா், முருகன் கோயில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், நான்கு கால பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெறுகின்றன.