‘நிகழாண்டு இதுவரை 5.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்’
சீா்காழி: நிகழாண்டு இதுவரை 5.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன.
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி ஆகியோா் ஞாயிற்றுகிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, அரசு கூடுதல் தலைமை செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறியது: ஜன.9-ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. சனிக்கிழமை வரை ரூ.1.47 கோடிக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (ஜன.13) எஞ்சியவா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
அதிகளவில் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனா். விவசாயிகளின் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். சனிக்கிழமை 1808 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுள்ளது.
நிகழாண்டு இதுவரை 5.52 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. செப்.9-தேதியிலிருந்து ரூ.1321 கோடி விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளோம். விவசாயிகளை எக்காரணத்தை கொண்டும் திருப்பி அனுப்பாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.