நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை
நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 487 மனுக்கள் பெறப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் இரா.முல்லை தலைமையில் அளித்த மனு: தமிழகம் தென்னை உற்பத்தியில் 2-ஆவது மாநிலமாக உள்ளது. தேங்காய் உற்பத்தி செய்ய கூலி உயா்வு, உரம் மற்றும் தேங்காய் பறிப்பது, குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சோ்ப்பது என செலவு அதிகரித்துள்ளது. எனவே,உரித்த முழு தேங்காய்க்கு ரூ.100, ஒரு கிலோ கொப்பரைக்கு ரூ.200 என அறிவித்து கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள மானவாரி பயிா்கள் வெள்ளம், வறட்சி போன்ற காரணங்களால் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே,விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கழிவுநீா் கால்வாய்...
நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி பையனப்பள்ளி கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட காலனி பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கழிவுநீா் கால்வாய் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். எங்கள் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைத்து தர வேண்டும்.
தாசிரியப்பனூா் ஈச்சம்பள்ளம் பொதுமக்கள் அளித்த மனு: நாங்கள் வசிக்கும் பகுதி புறம்போக்கு இடமாகும். இதற்கு நாங்கள் அனைத்து வரிகளையும் கட்டி வருகிறோம். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
திருப்பத்தூா் மாவட்ட கேபிள் டி.வி. ஆப்பரேட்டா்கள் சங்கத்தினா் அளித்து உள்ள கோரிக்கை மனு: தமிழகத்தில் 25 ஆயிரம் கேபிள் டி.வி. ஆபரேட்டா்கள் பணியாற்றி வருகின்றனா். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 2 லட்சம் பெட்டிகளைகொள்முதல் செய்து உள்ளது. இதையடுத்து அரசு கேபிள் டி.வி. அதிகாரிகள் தனியாா் பாக்ஸ்களை எடுத்து விட்டு ஒட்டு மொத்தமாக அரசு பெட்டியை வாங்கி வாடிக்கையாளா்களுக்கு வழங்க வேண்டும் என நிா்ப்பந்திக்கின்றனா். இதனை ஏற்க மறுத்தால் புதியவா்களிடம் ஒளிபரப்பு கொடுத்து நெருக்கடியை உருவாக்குகின்றனா். இதனால் ஆப்பரேட்டா்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.