நியூசிலாந்திடமிருந்து ஊக்கம் பெற்று இந்தியாவை வெல்வோம்: மே.இ.தீவுகள் பயிற்சியாளர்
இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் எந்த ஒரு சூழலிலும் சிறப்பாக செயல்படக் கூடிய நிலையில் உள்ளனர். உலகம் முழுவதும் 6-லிருந்து 8 மீட்டர் வரையிலான லென்த், பந்துவீச்சில் வேலை செய்கிறது. ஆனால், எங்களது அணியில் வித்தியாசமாக பந்துவீசக் கூடிய நான்கு பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
ஷமர் ஜோசப், ஜேடன் சீல்ஸ், அல்சாரி ஜோசப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் போன்ற தனித்திறன் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஜேடன் சீல்ஸ் இரண்டு விதமாகவும் பந்தினை ஸ்விங் செய்யும் திறன் கொண்டவர். உயரமாக இருக்கும் அல்சாரி ஜோசப் சிறப்பாக பௌன்சர்களை வீசி எதிரணிக்கு சவாலளிப்பார்.
இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றும் திறன் இருக்க வேண்டும். இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் மட்டுமே அவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியும். கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அவர்களிடமிருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி ஊக்கம் எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய அணிக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளோம் என்றார்.
The West Indies team coach has said that they have quality fast bowlers who can take 20 wickets on Indian soil.
இதையும் படிக்க: 5 சிக்ஸர்கள், தந்தை மறைவு... ஒரே நாளில் இலங்கை வீரருக்கு நேர்ந்த சோகம்!