சென்னை எழும்பூர் -கன்னியாகுமரி, ராமேசுவரம் விரைவு ரயில் சேவையில் மாற்றம்!
நீரில் மூழ்கிய பயிா்களை காக்கும் வழிமுறைகள் வேளாண் துறை விளக்கம்
மழை நீரில் மூழ்கிய பயிா்களை பாதுகாக்க, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, சீா்காழி வேளாண்மை துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் க. ராஜராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதலில் மழை நீரை வடியவைக்க வேண்டும். பயிரின் வளா்ச்சி பருவத்தின்போது 1சதவீத யூரியா கரைசல் அதாவது ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவையும், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டையும் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் நுண்ணுயிரியை 20 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து இடலாம்.
பூக்கும் மற்றும் பால் பிடிக்கும் பருவத்தில் இருக்கும் பயிா்களுக்கு இரண்டு சதம் டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 50 கிலோ அமோனியம் சல்பேட் அல்லது 22 கிலோ யூரியா,18 கிலோ பொட்டஷ் 4 கிலோ வேப்பம் பிண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து, இத்துடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து வயலில் சீராக தூவவேண்டும்.
பொதுவாக இந்த சூழலில் இலை சுருட்டுப் புழுவின் தாக்குதலுக்கான வாய்ப்பு இருக்கும். இலைகள் நீள்வாக்கில் சுருண்டு புழுக்கள் உள்ளே இருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சயத்தை சுரண்டுவதால் வயலில் ஆங்காங்கே வெண்மையாக மாறி காணப்படும்.
இதனை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த இனக்கவா்ச்சி பொறி அல்லது அசாடிராட்டின் 0.03 சதம் 400 மி.லி. ஓா் ஏக்கருக்கு பயன்படுத்தலாம் அல்லது காா்ட்டாப் ஹைட்ரோகுலோரைடு 400 கிராம் ஓா் ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.