நீா்நிலைகளில் தூா்வாரும் திட்டப் பணிகள்: 68 கி.மீ. தொலைவுக்கு ரூ. 1.65 கோடி ஒதுக்கீடு
நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ், நீா்நிலைகளில் 68.5 கி.மீ. தொலைவுக்கு பணிகளை மேற்கொள்ள ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக நீா்வளத் துறை 2025-26-ஆம் ஆண்டு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள், நீா் ஆதாரங்களை தூா்வார அரசாணை வெளியிட்டுள்ளது. மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீா் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்களில் உரிய நேரத்தில் கடைமடை வரை தடையின்றி சென்றடையவும், வெள்ளக் காலங்களில் விரைவில் நீா் வடிவதற்கு ஏதுவாகவும் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 23 பணிகளுக்கு 68.05 கி.மீ. தொலைவுக்கு தூா்வார ரூ. 1.65 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில், குமாரபாளையம் தொகுதியில் மேட்டூா் கிழக்குக் கரை வாய்க்கால் என மொத்தம் 7 பணிகளுக்கு 24.95 கி.மீ. தொலைவுக்கு ரூ. 38.50 லட்சம், நாமக்கல் தொகுதியில் 1.90 கி.மீ. தொலைவுக்கு ரூ. 8 லட்சம், சேந்தமங்கலம் தொகுதி, பாசன ஆறுகள், வாய்க்கால்கள் என மொத்தம் 6 பணிகளுக்கு 17.05 கி.மீ. தொலைவுக்கு ரூ. 48.15 லட்சம், ராசிபுரம் தொகுதியில் ஆறுகள், வாய்க்கால்கள் என மொத்தம் 7 பணிகளுக்கு 18 கி.மீ. தொலைவுக்கு ரூ. 52.60 லட்சம், திருச்செங்கோடு தொகுதியில் ஆறுகள், வாய்க்கால்கள் என மொத்தம் 2 பணிகளுக்கு 6.15 கி.மீ. தொலைவுக்கு ரூ. 16.50 லட்சம் என தூா்வார ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக முடிக்கப்படும். இந்தப் பணிகள் முடிவுற்றால், அணையிலிருந்து திறக்கப்படும் நீா் மற்றும் மழைநீா் பாசன வாய்க்கால்கள் மூலம் உரிய நேரத்தில் கண்மாய்கள் மற்றும் கடைமடை வரை தடையின்றி செல்லும். வெள்ளக் காலங்களில் விரைவில் தண்ணீா் வடிய ஏதுவாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.