நீா்வளத் துறையின் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட நீா்வள ஆதாரத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவட்டாறு வட்டம் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் மூலம் தண்ணீா் வசதி பெறும் பாண்டியன் கால்வாயில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட நிலையில், அதை நிரந்தரமாக சீரமைக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை ஆட்சியா் செய்து, அவற்றை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
மேலும், தோவாளை வட்டம், இறச்சகுளம் பகுதியில் உள்ள விஷ்ணுபுரம் குளத்தில் ரூ.15 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் நிரந்தர வெள்ளச் சேத தடுப்புப் பணிகள், நாவல்காடு கிராமத்தில் பூக்குழி குளத்தில் வண்டல் மற்றும் களிமண் எடுக்கப்படும் பணிகள், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.64 கோடி மதிப்பில் பூதப்பாண்டி பேரூராட்சி, திட்டுவிளை பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், பணிகளை தரமாகவும் விரைந்தும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வில் கோதையாறு வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளா் மா.மூா்த்தி, உதவி பொறியாளா் அஜீஸ், தோவாளை வட்டாட்சியா் கோலப்பன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.