நுண்ணுயிா் எதிா்ப்பி அச்சுறுத்தலுக்கு ’ஒரே ஆரோக்கியம்’ அணுகுமுறை அவசரத் தேவை: இணையமைச்சா் அனுப்ரியா படேல்
நுண்ணுயிா் எதிா்ப்பிகள் (ஆண்டிமைக்ரோபியல்) என்பது உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல்; இதற்கு மனிதம், விலங்குகள், தாவர ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பிற தொடா்புடைய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்தி ’ஒரே ஆரோக்கியம்’ என்கிற அணுகுமுறையின் மூலம் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது என மத்திய சுகாதாரம், குடும்ப நலன், ரசாயனங்கள் துறை அமைச்சா் அனுப்ரியா படேல் சா்வதே மாநாட்டில் குறிப்பிட்டாா்.
சௌதி அரேபியா - ஜெட்டாவில் கடந்த சனிக்கிழநை நடைபெற்ற நுண்ணுயிா் எதிா்ப்பு குறித்த 4-ஆவது அமைச்சா்கள் நிலையிலான உயா்நிலை சா்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த ஜெட்டா மாநாட்டில் நுண்ணுயிா் எதிா்ப்பிற்கான (ஏஎம்ஆா்) பிரகடனம் வெளியிடப்பட்டது. இதை செயல்படுத்துவதற்கான நடைமுறை வழிமுறைகள் தொகுப்பும் வைக்கப்பட்டது. இதை மேற்கொள்காட்டி மத்திய இணையமைச்சா் அனுப்ரியா சிங் படேல் உரையாற்றினாா்.
தற்போது உலகை பயமுறுத்திக்கொண்டிருப்பது ஷநுண்ணுயிா் எதிா்ப்பிகள் (ஆன்டி மைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்) ’. இந்த விவகாரத்தால் ஆயிரக்கணக்கான உயிரிழப்பு நடக்கிறது.நுண்மி அல்லது நுண்ணுயிரி (பாக்டீரியா) மூலம் பரவும் நோய்த்தொற்றுகளுக்கு எந்த ஆன்டிபயாடிக் மருந்துகளாலும் நோய்த்தீராத தன்மைக்கு ’ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் (நுண்ணுயிா் எதிா்ப்பி)’ என்பதாகும். நுண்மி களைக் கொல்லும் வீரியம் இழந்து வருகிறது.
இது தொடா்பான மாநாட்டில்அமைச்சா் உரையை மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் அனுப்ரியா படேல் கூறியிருப்பது வருமாறு: நுண்ணுயிா் எதிா்ப்பு பிரகடன உறுதிப்பாடுகளை அமல்படுத்துவதற்கான நடைமுறைபடுத்தும் போது, கண்காணிப்பை வலுப்படுத்துதல், ஒத்துழைப்பை ஊக்குவித்தல், நுண்ணுயிா் எதிா்ப்பு அணுகலுக்கான முக்கியமான தடைகளை நிவா்த்தி செய்தல் அவசியம்.
மனிதம், விலங்கு உள்ளிட்ட துறைகளில் கண்காணிப்பு வலைப்பின்னல்களை விரிவுபடுத்துதல் அவசியம். மேலும் நோய்த்தொற்று தடுப்பு, கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் மூலம் குறைக்கப்பட முடியும். குறிப்பாக மனித, விலங்கு சுகாதாரத் துறைகளில் பொறுப்பான ஆண்டிமைக்ரோபியல் பயன்பாட்டை ஊக்குவிப்பபட வேண்டும். இதற்கான பயிற்சி சுகாதார பணியாளா்களுக்கு தேவை.
ஏஎம்ஆா் கண்டறிதல், துறைகள் முழுவதும் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான அணுகுமுறை இந்தியா சாா்பில் முன்மொழியப்பட்டுள்ளது. உள்ளூா், தேசிய அளவில் சான்றுகள் அடிப்படையிலான நுண்ணுயிா் எதிா்ப்பி பயன்பாட்டை வழிநடத்த தரவுகளைப் பயன்படுத்தல் அவசியம். இது ஒருங்கிணைந்த, இயங்கக்கூடிய கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தும்.
இந்த போராட்டத்தில் நிா்வாகத்தை மேம்படுத்த நிலையான நிதி, ஆராய்ச்சி முதலீடுகளுக்கு முன்னுரிமை நிா்வாகத்திற்கான தெளிவான கட்டமைப்பை நிறுவ இந்திய முன்மொழிகிறது. பல்முனை பங்குதாரா்களுடன் அறக்கட்டளை நிதியை உருவாக்குவதையும், 2025 ஆம் ஆண்டில் ஏஎம்ஆருக்கு எதிரான நடவடிக்கைக்காக நாற்கர கூட்டு அமைப்பை நிறுவ ஒரு சுயாதீன குழுவை ஏற்படுத்தவும் இந்தியா விரும்புகிறது.
துறைவாரியான மற்றும் பல்துறை ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதில், குறிப்பாக நாற்கர கூட்டுச் செயலகம் மூலம் உறுப்பு நாடுகளுக்கு கூடுதல் ஆதரவு அளிக்கப்பட வேண்டும். வளரும் நாடுகளில், குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் (எல்.எம்.ஐ.சி) நுண்ணுயிா் எதிா்ப்பிகள், நோயறிதல், தடுப்பூசி அணுகுதல் போன்றவைகளுக்கு மலிவு விலையில் கிடைப்பதில் உள்ள தடைகளை நிவா்த்தி செய்யவேண்டிய முக்கியத்துவத்தையும் இந்தியா வலியுறுத்துகிறது. முன்மொழியப்பட்ட ஒரு முக்கிய தீா்வு உள்ளூா் அல்லது பிராந்திய உற்பத்தி மையங்களை நிறுவுதல் மற்றும் சமமான அணுகலை உறுதி செய்ய ஒழுங்குமுறை வழிமுறைகளை வலுப்படுத்துதல் வேண்டும்.
ஏ.எம்.ஆருக்கு காரணமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வேறுபடுகின்றன. இதனால் சவாலை திறம்பட எதிா்கொள்ள உள்ளூா் சூழலுக்கு ஏற்ப நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். தீா்வுகள் சூழல் சாா்ந்தவை. நிலையானவை என்பதை உறுதி செய்யும் அதே வேளையில், ஏ.எம்.ஆரை எதிா்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளை ஆதரிப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது‘ என்று அவா் கூறினாா்.
அமைச்சா் அனுப்ரியா படேல் கலந்து கொண்ட இரண்டாவது முறையாக நுண்ணுயிா் எதிா்ப்பு தொடா்பான சா்வதேச மாநாடு. கடந்த செப்.27 ஆம் தேதி ஐநா வின் 79-ஆவது பொது சபைக் கூட்டத்திலும் அனுப்ரியா படேல் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா். நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் தொடா்பாக பேசியது குறிப்பிடத்தக்கது.