செய்திகள் :

நெருப்பாக இருக்கிறதா சூர்யாவின் கங்குவா? திரை விமர்சனம்!

post image

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. தொடர்ந்து, ஆராய்ச்சி மையம் ஒன்றில் சிறுவர்களின் மூளைத் திறனை அதிகரிப்பதற்கான சோதனை நடைபெறுவதைக் காட்டுகின்றனர். ஹாலிவுட் படத்தைப் பார்க்கும் அனுபவமாக கிடைக்கப்போகிறது என நிமிர்ந்து உட்கார்ந்தால், சோதனைக் கூடத்திலிருந்து ஒரு சிறுவன் தப்பிக்கிறான். அடுத்த காட்சியில் கோவாவில் குத்தாட்டம் போடும் பிரான்சிஸ் (சூர்யா) அறிமுகமாகிறார்.

காவல்துறையால் தீர்க்க முடியாத வழக்குகளை திறம்பட செய்து முடித்து அதற்கான தொகையைப் பெற்றுக்கொள்ளும் ஆள். ஆய்வு மையத்திலிருந்து தப்பித்த சிறுவன் ஒருகட்டத்தில் பிரான்சிஸை சந்திக்கிறான். தங்களுக்குள் இனம்புரியாத உறவு இருப்பதை இருவரும் உணர்கின்றனர்.

தப்பித்த சிறுவனைத் தேடி ராணுவ பலம் கொண்ட ஆள்கள் கோவாவிற்குள் நுழைகின்றனர். ஆனால், அச்சிறுவனைக் கைவிட பிரான்சிஸுக்கு விருப்பமில்லை. இருவருக்கும் என்ன உறவு? சிறுவனை எதிராளிகளிடமிருந்து சூர்யா மீட்டாரா இல்லையா? என்பதே கங்குவா.

முதலில் இயக்குநர் சிவா உள்பட மொத்த படக்குழுவினருக்கும் கைத்தட்டல் கொடுக்கலாம். காரணம், அனைத்து துறையினரும் பயங்கரமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். பிளாஷ்பேக் காட்சிகளில் நிஜமான காட்டிற்குள் சென்றதுபோல் தீவுகளை உருவாக்கியதிலிருந்து அந்தக் காலகட்டத்தின் உணவு, உடை, ஆயுதங்கள், தோற்றம் என அனைத்திலும் இயக்குநர் சிவா மற்றும் மறைந்த கலை இயக்குநர் மிலனின் நுட்பமான பார்வை பிரதிபளிக்கிறது. எந்த விதத்திலும் குறைவில்லாத தரமான கலைப்பணி.

இயக்குநர் சிவா தமிழ் சினிமாவிலிருந்து இப்படியொரு படமாக என ரசிகர்கள் வியக்கும் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். முக்கியமாக, கங்குவா மற்றும் 10 ஆம் நூற்றாண்டு காட்சிகளும், பனி நிறைந்த வனமும் ஒளிப்பதிவும் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத அனுபவத்தைக் கொடுக்கின்றன. கதையாகவே 7ஆம் அறிவு படம்போல் சுவாரஸ்யமான முடிச்சுடன் உருவாகியிருக்கிறது. ஆனால், மேலோட்டமான உணர்ச்சியற்ற கதையும் திரைக்கதையும் படத்தை பாதிக்கிறது.

படத்தின் விஎஃப் எக்ஸ் பிரமாதம். பிளாஷ்பேக் காட்சிகளுக்கான கலைத்துறையும், விஎஃப்எக்ஸுகளும் தமிழ் சினிமாவிற்கு புதிய பாய்ச்சலைக் கொடுத்திருக்கின்றன. முக்கியமாக, சூர்யாவுக்கும் முதலைக்குமான சண்டைக்காட்சி தத்ரூபமாக இருக்கிறது.

நடிகர் சூர்யா திரையரங்க வெற்றிக்காகக் காத்திருப்பதும் அதற்காக அவர் கொடுத்திருக்கும் உழைப்பு கங்குவாவில் அதிகமாகவே தெரிகிறது. கங்குவா என்கிற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். பிளாஷ்பேக் சண்டைக்காட்சிகள் மற்றும் வசனங்களில் முழுக்க சூர்யாவின் படமாகவே இருக்கிறது.

திஷா பதானியா இது? எனக் கேட்கும் அளவிற்குதான் அவர் கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்பட்டமாக, படத்தின் வணிகத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். என்னால் இனிமேல் சிரிக்க வைக்க முடியாது என யோகி பாபு வெளிப்படையாக சொல்லும் காலம் வந்துவிடும்போல் தெரிகிறது. ஒரே மாதிரியான வசன உச்சரிப்பால் அடுத்த காட்சி எப்போது என தேட வைக்கிறார். பாபி தியோல் தன் தோரணையால் கொஞ்சம் மிரட்டுகிறார். நடிகர்கள் அவினாஷ், கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் தேவையான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பலமாகவும் பலவீனமாவும் அமைந்திருக்கிறது. ரசிகர்களுக்கு வசனமே புரியக்கூடாது என பல இடங்களில் பின்னணி இசையின் சப்தத்தை அதிகரித்திருக்கிறார். தலை வலி, காது வலி பிரச்னை கொண்டவர்கள் இருக்கையில் அமர்ந்திருப்பது சிரமம்.

ஒளிப்பதிவாளர் வெற்றியை பிரம்மாண்ட படங்களுக்கு பயன்படுத்தலாம். தான் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் என கங்குவாவில் நிரூபித்திருக்கிறார். அபாரமான ஒளியமைப்பால் அசரடிக்கிறார்.

இதுவரை இல்லாத அளவிற்கு படத்திற்கு ஏகப்பட்ட புரமோஷன். மொத்த படக்குழுவும் இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அலைந்து திரிந்து தீவிரமாகப் படத்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இருந்தனர். இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதால் பலருக்கும் படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெரும் என்றே தோன்றியது.

ஆனால், ஒளிப்பதிவு, கலைத்துறை, மேக்கப், விஎஃப்எக்ஸ் என பல துறைகளின் கடுமையான உழைப்பு காட்சிக்குக் காட்சி தெரிந்தாலும் கதையும் திரைக்கதையும் தடுமாறும் இடங்களால் இவை அனைத்தும் பலத்தை இழக்கின்றன. கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக்குமேல் செலவு செய்து படத்தை எடுக்க முன் வருபவர்கள் தேர்ந்த திரை எழுத்தாளர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்கு கங்குவா உதாரணம்.

2.30 மணி நேரம் கொண்ட படத்தில் பல காட்சிகள் சோர்வைக் கொடுக்கின்றன. தயாரிப்பாளர்கள் புரமோஷன்களை மட்டும் நம்பாமல் கதையையும் ஆழமாக தயாரிக்க வேண்டும். கங்குவா நெருப்புபோல் இருக்கும் என நடிகர் சூர்யா மேடைக்கு மேடை தெரிவித்திருந்தார். ஆனால், நெருப்பு விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் இயக்குநர் தண்ணீர் ஊற்றி அணைத்திருக்கிறார்!