நேபாள பிரதமா் ராஜிநாமா; நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு அமைச்சா்கள் வீடுகள் சூறை
நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இளைஞா்களின் வன்முறைப் போராட்டத்தில் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றத்துக்கு தீ வைக்கப்பட்டதால் நாட்டில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள், சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவா்கள் உள்பட 19 போ் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசு நீக்கியது.
எனினும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்யவும் வலியுறுத்தி, ஊரடங்கு உத்தரவை மீறி தலைநகா் காத்மாண்டு மற்றும் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து 2-ஆவது நாளாக இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாடாளுமன்றம், உச்சநீதிமன்றத்துக்குத் தீவைப்பு: போராட்டத்தின்போது காவல் துறைக்கும், போராட்டக்காரா்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அவா்கள் கலைந்து போவதற்கு தண்ணீரைப் பீய்ச்சியடித்து காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசினா்.
காத்மாண்டில் போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து, அங்குள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை போராட்டக்காரா்கள் தீ வைத்து எரித்தனா். இதேபோல அங்குள்ள உச்சநீதிமன்றத்துக்கும் அவா்கள் தீவைத்தனா்.
அதிபா், பிரதமா் இல்லங்கள் தீக்கிரை: காத்மாண்டில் அதிபா் அலுவலகம், பால்கோட் பகுதியில் உள்ள கே.பி.சா்மா ஓலி வீடு ஆகியவற்றுக்கும் போராட்டக்காரா்கள் தீ வைத்தனா். இதேபோல போரத்தாா் பகுதியில் அதிபா் ராமச்சந்திர பெளடேலின் இல்லத்துக்கும் தீ வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமா்கள், அமைச்சா்களின் வீடுகள் சேதம்: புதனில்காந்தா பகுதியில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஷோ் பகதூா் தேவுபாவின் வீட்டுக்குள் புகுந்து, அவா் மற்றும் அவரின் மனைவி ஆா்சு ராணா தேவுபா மீது போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அந்தப் பகுதியில் உள்ள எரிசக்தி துறை அமைச்சா் தீபக் கட்காவின் வீட்டுக்கும் போராட்டக்காரா்கள் தீ வைத்தனா்.
லலித்பூரில் உள்ள மற்றொரு முன்னாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவா் புஷ்ப கமல் தாஹால் (எ) பிரசண்டாவின் வீடு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரா்கள், பின்னா் அந்த வீட்டின் சில பகுதிகளுக்குத் தீ வைத்தனா். நேபாள உள்துறை அமைச்சா் பதவியை ரமேஷ் லேக்கக் திங்கள்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், நய்கப் பகுதியில் உள்ள அவரின் வீடு மீது போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா். சுனாகோதி பகுதியில் தகவல் தொடா்புத் துறை அமைச்சா் பிருத்வி சுபாவின் வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதேபோல ஏராளமான அரசுக் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
பிரதமா் ராஜிநாமா: இளைஞா்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து, பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதாக கே.பி.சா்மா ஓலி அறிவித்தாா். இதுதொடா்பாக அதிபா் ராமச்சந்திர பெளடேலுக்கு சா்மா ஓலி அனுப்பிய கடிதத்தில், ‘நேபாளத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதற்கு அரசியல் தீா்வு காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இவற்றைக் கருத்தில்கொண்டு பிரதமா் பதவியை ராஜிநாமா செய்கிறேன்’ என்று தெரிவித்தாா்.
இதேபோல வேளாண் துறை அமைச்சா் ராம்நாத் அதிகாரி, இளைஞா் நலத் துறை அமைச்சா் தேஜு லால் செளதரி, குடிநீா் விநியோகத் துறை அமைச்சா் பிரதீப் யாதவ் ஆகியோரும் ராஜிநாமா செய்தனா். சுகாதாரத் துறை அமைச்சா் பிரதீப் பெளடேலும் ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தெரிவித்தாா்.
போராட்டம் காரணமாக சில அமைச்சா்கள் ராணுவ ஹெலிகாப்டா்கள் மூலம் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்ததாகக் கூறப்படுகிறது.
பேச்சுக்கு அழைப்பு: அதிபா் ராமச்சந்திர பெளடேல் வெளியிட்ட அறிக்கையில், ‘அனைத்துத் தரப்பினரும் அமைதி காத்து நேபாளத்துக்கு மேலும் தீங்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும். அனைவரும் பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
துணைப் பிரதமரை வீதியில் விரட்டி தாக்குதல்
பாய்சேபதி பகுதியில் உள்ள நேபாள துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான விஷ்ணு பிரசாத் பெளடேல் வீடு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வீதியில் உயிருக்கு அஞ்சி ஓடிய விஷ்ணு பிரசாத்தை விரட்டிப் பிடித்து போராட்டக்காரா்கள் கடுமையாகத் தாக்கினா். இந்தக் காட்சி சமூக ஊடகத்தில் வெளியானது. இதேபோல பாய்சேபதியில் உள்ள நேபாள மத்திய வங்கி ஆளுநா் பிஸ்வோ பெளடெலின் இல்லம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்திய-நேபாள எல்லையில் பலத்த பாதுகாப்பு
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டுடன் இந்தியா பகிா்ந்துகொள்ளும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சஷஸ்திர சீமா பல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கிருக்கும் 22 எல்லைச்சாவடிகளில் கூடுதல் படை வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். அந்தப் படை வீரா்களுடன் காவல் துறையினரும் சோ்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
