பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகள் பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மக்களுக்கு அரசர் வலியுறுத்தல்!
மொராக்கோவில் பக்ரீத் பண்டிகையின்போது ஆடுகள் பலியிடப்படுவதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியான சூழல் நிலவி வருகின்றது. இதனால், அந்நாட்டின் கால்நடைகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 38 முதல் 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் விற்பனையாகும் இறைச்சியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து சுமார் 1 லட்சம் செம்மறி ஆடுகள் இறக்குமதி செய்யவுள்ளதாக அந்நாட்டு அரசு கடந்த பிப்.20 அன்று அறிவித்ததிருந்தது.
இதையும் படிக்க:மார்ச் 4 முதல் புதிய வரி விதிப்பு அமல்: டிரம்ப்பால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு?
இந்நிலையில், கடந்த பிப்.26 அன்று மொராக்கோ அரசர் ஆறாம் முஹம்மதின் கடித்தை தொலைக்காட்சி வாயிலாக இஸ்லாமிய அமைச்சர் அஹமது தொஃபிக் நாட்டு மக்களுக்கு வாசித்தார். அப்போது அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி மிகுந்த காலங்களில் பாரம்பரியத்தை பின்பற்றி கால்நடைகளை பலி கொடுப்பதின் மூலம், அந்நாட்டில் குறைந்த வருமானமுள்ள மக்கள் பாதிப்படைவார்கள். மேலும், கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதினால் பக்ரீத் பண்டிகையின்போது மக்கள் செம்மறி ஆடுகள் பலியிடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மொராக்கோ முழுவதும் விலைகளை நிலைப்படுத்த உதவும் வகையில், கால்நடைகள், செம்மறி ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் சிவப்பு இறைச்சிகள் மீதான இறக்குமதி வரி உள்ளிட்ட வரிகளுக்கு சமீபத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதேபோன்ற ஓர் அறிவிப்பை தற்போதைய அரசர் ஆறாம் முஹம்மதின் தந்தையான முன்னாள் அரசர் இரண்டாம் ஹசன் கடந்த 1966 ஆம் ஆண்டு மொராக்கோவில் நிலவிய கடுமையான வறட்சியின் போது வெளியிட்டார்.
மேலும், இஸ்லாமியர்களினால் கொண்டாடப்படும் ஈயித் அல்- அதா (எ) பக்ரீத் பண்டிகையின்போது பாரம்பரியமாக ஆடு போன்ற கால்நடைகள் பலியிடப்பட்டு அதன் இறைச்சியானது உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகையானது வருகின்ற ஜூன் மாதம் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களினால் கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.