Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த ...
பசும்பொன்: ``துரோகத்தை வீழ்த்த ஒன்றிணைந்துள்ளோம்'' - ஓபிஎஸ், செங்கோட்டையனுடன் தினகரன் பேட்டி
பார்வர்ட் பிளாக் கட்சியின் முக்கியத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா இன்று எழுச்சியாக நடந்து வருகிறது.

இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் இன்று பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனித்தனியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் சேர்ந்து பசும்பொன் சென்றது பரபரப்பை ஏற்படுத்த, பசும்பொன்னில் டிடிவி தினகரனுடன் இணைந்து அஞ்சலி செலுத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்பு அங்கு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "துரோகத்தை வீழ்த்த மூவரும் ஒன்றிணைந்துள்ளோம். மூவரும் இணைந்து தேர்தல் பணியாற்றுவோம். தென் தமிழ்நாட்டிற்கு விருந்தாளியாக செங்கோட்டையன் வந்துள்ளார்.
அம்மாவின் தொண்டர்களை ஒன்றினைக்க இணைந்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் எங்கள் எதிரி, அவரைத்தவிர அதிமுகவிலுள்ள யாரும் எங்களுக்கு எதிரி அல்ல. எங்கள் அணியில் சசிகலாவும் விரைவில் இணைவார்" என்றார்.
ஓபிஎஸ் பேசும்போது, "கொங்கு நாட்டின் தங்கம் அண்ணன் செங்கோட்டையன். அனைவரையும் ஒன்றிணைக்க சபதம் எடுத்துள்ளோம். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்க இங்கு சபதம் எடுத்துள்ளோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும்" என்றார்.

அருகில் நின்ற செங்கோட்டையன் எந்த கருத்தும் கூறவில்லை, டிடிவி, ஓபிஎஸ் கூறியதையும் மறுக்கவில்லை. பசும்பொன்னில் மூவரும் இணைந்து அஞ்சலி செலுத்தியதும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















