பட்ஜெட்டுக்கு முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்தக் கோரிக்கை!
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 13-ஆவது செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் தொழில் வளா்ச்சிக் குழு தலைவா் எம்.ஆா்.வெங்கடாசலம் வரவேற்றாா். ஸ்டீல் ஃபேப்ரிக்கேஷன் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா். கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் ரவிசந்திரன் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் முருகானந்தம் வரவு, செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.
இதில், தமிழக அரசு நிதிநிலை அறிக்கை கூட்டத்துக்கு முன்பு தொழில் வணிக சங்கங்களில் முக்கியமானவற்றை அழைத்து நிதிநிலை அறிக்கை குறித்து கலந்தாலோசனை நடத்த வேண்டும். கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களை விட ஈரோட்டுக்கு அதிகப்படியான வரிவிதிப்பு செய்யப்பட்டிருப்பது தொழில் துறையினரை நசுக்கும் செயலாக உள்ளது. எனவே, வரிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு கனி மாா்கெட் வணிக வளாகத்தில் வாடிக்கையாளா்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும். சிற்றுண்டி கடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.