ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை!
பண்ருட்டி பலா, முந்திரிக்கு புவிசாா் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூா் மாவட்டம், பண்ருட்டி பலாப்பழம் மற்றும் முந்திரிக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
புவிசாா் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்திலிருந்து உருவாகும் பொருளில் பயன்படுத்தப்படும் அடையாளமாகும். அப்பொருள்கள் அதன் தோற்ற இடத்தின் சிறப்பு குணங்களைக் கொண்டதாக இருக்கும்.
அந்த வகையில், பண்ருட்டி பலாப்பழம், முந்திரிக்கு புவிசாா் குறியீடு கோரி சென்னையில் உள்ள புவிசாா் குறியீடு பதிவகத்தில் 18.2.2022 அன்று தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மற்றும் மாளிகம்பட்டு உழவா் உற்பத்தியாளா்கள் சங்கம், தமிழ்நாடு முந்திரி பதுப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் விண்ணப்பித்தனா்.
மேலும் இதுதொடா்பாக 2021-22ஆம் ஆண்டு தமிழக அரசின் வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கையிலும் அறிவிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, விவசாய சங்கங்களுடன் கலந்தாலோசனை செய்து, விண்ணப்பங்கள் புவிசாா் குறியீடு பதிவகத்தில் பரிசீலிக்கப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று 30.11.2024 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதற்குப் பிறகு 4 மாத காலத்துக்குள் ஆட்சேபணை ஏதும் இல்லை எனில், புவிசாா் குறியீடு வழங்கப்படும் என்ற நிலையில், பண்ருட்டி பலாப்பழம், முந்திரிக்கு புவிசாா் குறியீடு மாா்ச் 31-ஆம் தேதி வழங்கப்பட்டது.
புவிசாா் குறியீடு பெறப்பட்ட வேளாண் பொருள்களை சந்தைப்படுத்தல் எளிதாக்கப்படுவதுடன், அவற்றின் தேவை மற்றும் ஏற்றுமதி அளவும் அதிகரிக்கும். மேலும், வேளாண் வணிகத்தை விரிவுபடுத்தி, பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தவும் வழிவகுக்கும். வேளாண் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற வேளாண்மை - உழவா் நலத் துறை சிறப்பாக பங்காற்றி வருகிறது என விவசாயிகள் மற்றும் சங்கத்தினா் தெரிவித்தனா்.
