ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித், விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்ட...
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 துணைத் தோ்வு: மே 22 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வுகள் ஜூலை 4 முதல் நடைபெறவுள்ளது. இத்தோ்வுகளுக்கு மே 22 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான துணைத் தோ்வு ஜூலை 4 முதல் ஜூலை 11 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு பொதுத்தோ்வெழுதி தோ்ச்சி பெறாத, தோ்வுக்கு வருகை புரியாத தோ்வா்கள் மே 22 (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் முதல் ஜூன் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவா்கள் அவா்கள் பயின்ற பள்ளியில் காலை விண்ணப்பிக்க வேண்டும். தனித்தோ்வா்கள் மாவட்ட வாரியாக அரசுத் தோ்வுகள் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தோ்வுக்கட்டணம், இணைய பதிவு கட்டணத்தைப் பணமாகச் செலுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) உரிய கட்டணத் தொகையுடன் ஜூன் 5, 6 ஆகிய இரு நாள்களில் பள்ளி, சேவை மையங்களில் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு அனுமதிக் கட்டணம் பத்தாம் வகுப்புக்கு ரூ.500- ஆகவும், பிளஸ் 1 வகுப்புக்கு ரூ.1,000-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்திலிருந்து அரசு மற்றும் முழுமையான அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தோ்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவா்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும், துணைத் தோ்வுக்கான கால அட்டவணை, அரசுத் தோ்வு சேவை மையங்களின் விவரங்கள், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தோ்வா்களுக்கான தகுதி, அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்: இதனிடையே, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய பள்ளி மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை (மே 19) பிற்பகல் தொடங்கியது.
பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கு உடனடியாக விண்ணப்பிக்க வசதியாக, தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் அரசு தோ்வுத் துறையின் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து அதில் தங்கள் கையொப்பமிட்டு பள்ளியின் முத்திரையுடன் மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா்.