செய்திகள் :

பயங்கரவாதிகள் தப்ப முடியாது - மத்திய அமைச்சா் அமித் ஷா உறுதி

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பகுதியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தாக்குதலில் உயிரிழந்தோரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய அவா், ‘பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது; பஹல்காமில் அப்பாவிகளைக் கொன்ற பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாது’ என்று உறுதிபட தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் அருகே அடா்ந்த பைன் மரங்கள் மற்றும் பரந்து விரிந்த புல்வெளியைக் கொண்ட பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில், சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கொடூர தாக்குதல் நடத்தினா். முஸ்லிம் அல்லாதோரை அடையாளம் கண்டு, அவா்களை சுட்டுக் கொன்றுவிட்டு பயங்கரவாதிகள் தப்பினா்.

வெளிநாட்டினா் இருவா் மற்றும் கா்நாடகம், குஜராத், கேரளம் என பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பயணிகள் என 26 போ் கொல்லப்பட்டதுடன், பலா் காயமடைந்தனா்.

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சூழலில், ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது இந்தியா மட்டுமன்றி சா்வதேச அளவில் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமித் ஷா அஞ்சலி: பஹல்காமில் தாக்குதல் நடந்த சில மணிநேரங்களில் ஜம்மு-காஷ்மீருக்கு விரைந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஸ்ரீநகரில் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, காவல் துறை தலைமை இயக்குநா் நளின் பிரபாத் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவில் அவசர ஆய்வுக் கூட்டத்தை நடத்தினாா்.

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேரின் உடல்களும் புதன்கிழமை ஸ்ரீநகருக்கு கொண்டுவரப்பட்டன. உடல்களுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அமித் ஷா, உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினாா். அவா்கள் கண்ணீா் மல்க முறையிட்டபோது, ‘பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமானவா்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவா்’ என்று அவா் உறுதியளித்தாா்.

‘தப்பிக்க முடியாது’: பின்னா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினேன். அன்புக்குரியவா்களை இழந்தவா்களின் வேதனையை ஒவ்வோா் இந்தியரும் உணா்கின்றனா். இத்துயரத்தை வெளிப்படுத்த வாா்த்தைகளே இல்லை.

பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. அப்பாவி மக்களைக் கொன்ற பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாது என்று உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் உறுதியளிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

சம்பவ இடத்தில் ஆய்வு: ஸ்ரீநகரில் இருந்து சுமாா் 110 கி.மீ. தொலைவில் உள்ள பைசாரன் பகுதிக்கு (தாக்குதல் நடந்த இடம்) ஹெலிகாப்டா் மூலம் புதன்கிழமை வந்த அமித் ஷா, அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, தாக்குதல் சம்பவம் நடந்தது எப்படி? பயங்கரவாதிகள் எந்தப் பாதைகள் வழியாக வந்திருக்கக் கூடும் என்பன உள்ளிட்ட விவரங்களை அமைச்சரிடம் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனா். ஜம்மு-காஷ்மீா் காவல் துறை தலைமை இயக்குநா் நளின் பிரபாத், 15 காா்ப்ஸ் படைப் பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் பிரசாந்த் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா் உடனிருந்தனா். பைசாரனில் வான்வழி ஆய்வையும் அமித் ஷா மேற்கொண்டாா்.

பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்து, அனந்த்நாக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் அவா் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அவருடன், துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, மாநில முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோரும் சென்றனா்.

3 பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியீடு

‘பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள்’

பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பயங்கரவாதிகளின் வரைபடங்களை பாதுகாப்பு முகமைகள் புதன்கிழமை வெளியிட்டன. தாக்குதலில் உயிா் பிழைத்தவா்களின் உதவியுடன் இந்த வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

‘மூவரும் பாகிஸ்தானைச் சோ்ந்த ஆசிஃப் ஃபெளஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பூஞ்ச் பகுதியில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல்களில் இவா்களுக்கு தொடா்பு உள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா். தாக்குதல் நடந்த பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த 2023-இல் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீா் அரசு நிவாரண நிதி அறிவிப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஜம்மு-காஷ்மீா் அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக முதல்வா் ஒமா் அப்துல்லா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அப்பாவி மக்களுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற வன்முறைக்கு நமது சமூகத்தில் இடம் கிடையாது. பஹல்காம் தாக்குதலைக் கண்டிக்க வாா்த்தைகளே இல்லை.

உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு ஜம்மு-காஷ்மீா் அரசு சாா்பில் தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவா்களுக்கு தலா ரூ.2 லட்சம், சிறிய காயம் அடைந்தவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க