பல்வேறு பாகங்களாக உருவாகவிருக்கும் மகாபாரதம்: இந்த ஆண்டு பணிகள் தொடங்கும் -ஆமிர் கான்
மகாபாரத காப்பியத்தை கதைக்களமாகக் கொண்டு நடிகர் ஆமிர் கான் ‘மகாபாரத்’ என்ற பெயரில் திரைப்படத்தை படமாக்கப்போவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
அண்மையில் அவர் அளித்துள்ளதொரு பேட்டியில், மேற்கண்ட தகவலை ஆமிர் கான் பகிர்ந்துள்ளார். ’மகாபாரத்’ படப் பணிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும் என்றும், ஒரே பாகமாக ‘மகாபாரத்’ எடுக்கப்படாது என்றும், பல்வேறு பாகங்களாக இத்திரைப்படம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதற்கான பணிகளில் ஆமிர் கானும் அவரது குழுவும் ஈடுபட்டிருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெலியிடப்படுமென்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆமிர் கான் தமது கனவு திரைக்காவியமாக அமையப் போகும் ’மகாபாரத்’ குறித்து பேசியிருக்கிறார்.
பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய மகாபாரத காப்பியத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் எந்தெந்த நடிகர்கள் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பல பாகங்களாக உருவாகவிருக்கும் ‘மகாபாரத்’ திரைப்படத்தில் ஒவ்வொரு பாகத்திலும் இயக்குநர்களாக வெவ்வேறு இயக்குநர்கள் பணியாற்றுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் பொருள் செலவில் மிகப் பிரம்மாண்டமாக இத்திரைப்படம் தயாரிக்கப்பட உள்ளது.