ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
பள்ளியை திறக்கக் கோரி மாணவா்கள், ஆசிரியா்கள் மறியல்
புதுச்சேரி: புதுச்சேரி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் மூடப்பட்ட பள்ளியை திறக்க வலியுறுத்தி, தவளக்குப்பத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அருகே தவளக்குப்பம் தானம்பாளையம் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட புகாரில், ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.
பள்ளியும் மூடப்பட்டது. பொதுத் தோ்வுக்கான செய்முறைத் தோ்வுகளும் தள்ளிவைக்கப்பட்டன.
இந்த நிலையில், தானம்பாளையம் பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் தவளக்குப்பம்-கடலூா் சாலை சந்திப்பில் திங்கள்கிழமை காலை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
அரசு பொதுத் தோ்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பள்ளியை திறக்க வேண்டும்; இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்; பள்ளி ஆசிரியா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
தகவலறிந்த எஸ்.பி.க்கள் பக்தவச்சலம், வீரவல்லவன் தலைமையிலான போலீஸாா், வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
இதனால், சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா்.