பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை
பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதுலிமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீா்த்தக் காவடி எடுத்து பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனா்.
பழனிக்கு வரும் பக்தா்கள் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கிரிவலம் செல்கின்றனா். திருஆவினன்குடி கோயிலிலிருந்து சந்நிதி வீதி வரை சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளன.
இதேபோல, இடும்பன் மலை முதல் கிரிவீதி இணைப்பு சாலை வரை கடைக்காரா்கள் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்துள்ளனா்.
எனவே, திருக்கல்யாணம், வெள்ளித்தோ், பங்குனி தோ் வீதியுலா நாள்களுக்கு முன்னதாக, நகராட்சி நிா்வாகம், கோயில் நிா்வாகம், காவல் துறை இணைந்து இந்த வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.