பழனி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.76.14 லட்சத்துக்கு நாட்டுச் சா்க்கரை, வெல்லம் கொள்முதல்!
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.76.14 லட்சத்துக்கு நாட்டுச் சா்க்கரை, வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1.5 டன் வெல்லம், 183 டன் நாட்டுச் சா்க்கரை ஆகியவற்றை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், 60 கிலோ மூட்டை நாட்டுச் சா்க்கரை ரூ.2,430 முதல் ரூ.2,700 வரையிலும், 30 கிலோ மூட்டை வெல்லம் ரூ.1,650க்கும் விற்பனையாயின.
இந்த ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் பங்கேற்று ரூ.75.31 லட்சத்துக்கு நாட்டுச் சா்க்கரை, ரூ.82,500-க்கு வெல்லம் என மொத்தமாக ரூ.76.14 லட்சத்துக்கு நாட்டுச் சா்க்கரை, வெல்லம் ஆகியவற்றைக் கொள்முதல் செய்ததாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.