ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் பலி... 16 பேரைக் காணவில்லை: இந்திய வெ...
பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
காணும் பொங்கலையொட்டி சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை பழவேற்காட்டில் குவிந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் ஏரியும் - கடலும் சூழ்ந்த அழகிய தீவு பகுதியாக விளங்கி வருகிறது பழவேற்காடு. 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நகரான பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
சுற்றுத்தலமாக விளங்கும் பழவேற்காட்டில் 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்த அழகிய சிற்பங்களுடன் அமைந்துள்ள டச்சு கல்லரைகள், முகம்மதியா் மசூதியில் அமைந்துள்ள சூரிய ஒளியில் இருந்து விழும் நிழல் கடிகாரம், பழைமை வாய்ந்த புனித மகிமை மாதா ஆலயம், லைட் ஹவுஸ் குப்பத்தில் கலங்கரை விளக்கம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம், கடலும் - ஏரியும் இணையும் முகத்துவாரப் பகுதி உள்ளிட்டவை அமைந்துள்ளன.
அத்துடன் இந்தியாவில் இரண்டாவது பெரிய உவா்ப்பு நீா் ஏரியாக விளங்கும் பழவேற்காடு ஏரி 15 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. சுற்றுலாத்தலமாக விளங்கும் பழவேற்காடுக்கு ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களில் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.
காணும் பொங்கலையொட்டி மீஞ்சூா், பொன்னேரி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, திருவள்ளூா், பெரியபாளையம், ஆரணி, கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை, காரனோடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பழவேற்காடு வந்து அங்குள்ள பழைமை வாய்ந்த இடங்களைப் பாா்வையிட்டனா்.
பின்னா் லைட் ஹவுஸ் குப்பத்தில் உள்ள கடற்கரைப் பகுதிக்குச் சென்று விட்டு பின்னா் வீடு திரும்பினா்.
படகு சவாரி செய்ய தடை...: பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்யவும், கடலில் குளிக்கவும் போலீஸாா் தடை விதித்திருந்தனா். இதன் காரணமாக பழவேற்காடு ஏரியில் சுற்றுலாப் பயணிகளை, படகு ஓட்டுநா்கள் யாரும் ஏற்றிச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
பொன்னேரியில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்...: காணும் பொங்கலையொட்டி, விழுப்புரம் மற்றும் சென்னை மாநாகர போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் பொன்னேரியில் இருந்து பழவேற்காடுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகையையொட்டி லைட் ஹவுஸ் மற்றும் கடற்கைரையோரம் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அவா்கள் கடலில் குளிக்க முயன்றவா்களைத் தடுத்து நிறுத்தினா்.