கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம், யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சமா? தமிழிசை
பழையனூரில் புதிதாக திருமண மண்டபம் கட்டப்படும்: அமைச்சா் எ.வ.வேலு
திருவண்ணாமலை மாவட்டம், பழையனூரில் 4 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெரும் வகையில் 6 மாதங்களுக்குள் திருமண மண்டபம் கட்டித்தரப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
திருவண்ணாமலையை அடுத்த வேளையாம்பாக்கம் ஊராட்சியில் சனிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
கிராம மக்கள் பலா் எங்கள் பகுதிக்கு பக்கக் கால்வாய் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா். கிராமங்களில் சாலையோரம் பக்கக் கால்வாய்களை கட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாலையின் இருபுறமும் பக்கக் கால்வாய்களை கட்டிவிட்டால் போக்குவரத்துக்கு இடையூறாகி விடும். இதேபோல, கிராமங்களில் கட்டப்படும் சமுதாயக் கூடங்களும் போதிய பலன் தருவதில்லை. சமுதாயக் கூடங்களில் சிறு, சிறு நிகழ்ச்சிகளை நடத்தினால் கூட அமா்ந்து சாப்பிட போதிய இடம் இருப்பதில்லை. வேளையாம்பாக்கம் ஊராட்சி மட்டுமின்றி சுற்றியுள்ள 4 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் திருமணம் நடத்துவதற்காக தொலைவில் உள்ள திருவண்ணாமலை அல்லது மணலூா்பேட்டைக்கு செல்ல வேண்டியுள்ளது.
எனவே, இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 4 ஊராட்சிகளுக்கும் மையப் பகுதியாக உள்ள பழையனூரில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 6 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்றாா்.
நலத்திட்ட உதவிகள்: கூட்டத்தில், நூறு நாள் திட்டத்தின் கீழ் ரூ.6.77 லட்சத்தில் சிறிய பாலம் கட்டுவதற்கான ஆணை, உட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு உட்டச்சத்து பெட்டகங்கள், 3 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், 4 பேருக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணைகள், 3 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன், திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அமைச்சா் ஆய்வு: பழையனூா் ஊராட்சியில் திருமண மண்டபம் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சா் எ.வ.வேலு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சென்று வருவதற்கு ஏதுவாக திருமண மண்டபத்தை கட்ட வேண்டும். கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கி தரமாக கட்டி முடிக்க வேண்டும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.