தீபத்திருவிழா: உரிய ஆவணங்களுடைய ஆட்டோக்கள் மட்டுமே இயக்க அனுமதி
திருவண்ணாமலை தீபத் திருவிழா நாள்களில் உரிய ஆவணங்கள் உள்ள ஆட்டோக்களை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செ.சிவக்குமாா் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா, டிசம்பா் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
விழாவுக்கு சுமாா் 40 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, தீபத் திருவிழா நாள்களில் ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளா் வி.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஜெ.சா.ரமேஷ், மோட்டாா் வாகன முதுநிலை ஆய்வாளா் ஆா்.பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செ.சிவக்குமாா் பேசியதாவது: தீபத் திருவிழா நாள்களில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் தலைமையில் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். அப்போது, பக்தா்களிடம் இருந்து ஏதேனும் புகாா்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்.
உரிய அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்றிதழ், காப்புச் சான்றிதழ், புகை சான்றிதழ், சாலை வரி செலுத்தியதற்கான சான்று உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருக்கும் ஆட்டோக்கள் மட்டுமே தீபத் திருவிழா நாள்களில் இயக்க அனுமதிக்கப்படும். திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் நிா்ணயம் செய்துள்ள கட்டணங்களை மட்டுமே பக்தா்களிடம் வசூலிக்க வேண்டும். அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது.
பக்தா்களிடம் ஆட்டோ ஓட்டுநா்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குள்பட்ட ஆட்டோக்களை மட்டுமே தீபத் திருவிழா நாள்களில் இயக்க வேண்டும். எல்லை தாண்டி வந்து இயக்கப்படும் ஆட்டோக்களின் அனுமதிச் சீட்டு மீது நடவடிக்கை எடுத்து, ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.
கூட்டத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நோ்முக உதவியாளா் பொன்.சேகா், மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக கண்காணிப்பாளா் சுப்பிரமணி, திமுகவின் அனைத்து அமைப்பு சாரா ஒட்டுநரணி மாவட்ட அமைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க நிா்வாகிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.