பஹல்காம்: அச்சுறுத்தும் பகுதியாக மாறியதா, பிரபல சுற்றுலாத் தலம்?
பாகிஸ்தானியர்களின் விசா ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாதத் தாக்குதல் நாடு முழுவதுமே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் வரத் தடை, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பாகிஸ்தானியர்கள் அட்டாரி- வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக வெளியுறவுத் துறை அமைச்சகம் இதுதொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
"பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளின்படி பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ விசாக்கள் வருகிற ஏப்ரல் 29 வரை மட்டுமே செல்லுபடியாகும். விசா காலாவதியாகும் முன்பாக அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இந்தியர்கள், பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும்" என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.