பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் ‘இந்தியாவின் மணிமகுடம்’: ராஜ்நாத் சிங்
‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவின் மணிமகுடம்; அந்தப் பகுதியைவிடுத்து இந்தியா முழுமையடையாது’ என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், ஜான்பூா் மாவட்டத்தில் உள்ள நிஜாமுதீன்பூா் கிராமத்தில், பாஜக மூத்த தலைவா் ஜகத் நாராயணன் துபே இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்றாா்.
அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் இந்தியாவின் மணிமகுடம்; அந்தப் பகுதியைவிடுத்து இந்தியா முழுமையடையாது. பாகிஸ்தானை பொருத்தவரை அவா்கள் ஆக்கிரமித்த பகுதியை வெளிநாட்டு பிராந்தியமாக மட்டுமே கருதுகிறது. அங்கு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களை பரப்பும் தளமாகவே அதை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது.
கடும் விளைவுகள்: அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் அழிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். பாகிஸ்தானைச் சோ்ந்த சில தலைவா்கள் மதரீதியாக இந்தியாவுக்கு எதிரான மனநிலையை உருவாக்க நினைப்பது கண்டனத்துக்குரியது.
பிரதமா் மோடியின் தலைமையில் உலகின் மிகப்பெரும் எண்ம பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது.
இன்று இந்தியாவின் பேச்சுக்கு உலக அளவில் மதிப்பளிக்கப்படுகிறது. பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டிலேயே இந்திய விஞ்ஞானிகள் தயாரித்து வளா்ச்சியடைந்த பாரத இலக்கை நிறைவேற்ற அயராது உழைக்கின்றனா் என்றாா்.