கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: காங்கிரஸ் தலைவா் காா்கே
இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவின் தவறான பொருளாதார நிா்வாகம் கட்டுக்கடங்காமல் செல்கிறது. வா்த்தக பற்றாக்குறை 3 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் வா்த்தக போா் தொடா்பாக எந்தத் தெளிவும் இல்லை.
பொருள்களின் விலை உயா்ந்துள்ளதாக 90 சதவீத நுகா்வோா்கள் தெரிவித்துள்ளனா். இதன் விளைவாக, தங்கள் வருமானம் அதிகரிக்காதபோதிலும் செலவு அதிகரித்துள்ளதாக 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்கள் தெரிவித்துள்ளனா். இது நிகழாண்டு மாா்ச் மாதத்துக்கான ரிசா்வ் வங்கியின் நுகா்வோா் கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பா் வரை, மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை மீதான வரிகளாக ரூ.39 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.
வேலையில்லாப் பட்டதாரிகள் விகிதம் 13 சதவீதமாகவும், வேலையில்லாத இளைஞா்களின் விகிதம் 10.2 சதவீதமாகவும் உள்ளது. கடந்த 2012-13-ஆம் ஆண்டில் நிகர அந்நிய நேரடி முதலீடு 19 பில்லியன் டாலராக இருந்தது. இது 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 1.4 பில்லியன் டாலருக்கும் கீழ்தான் இருந்தது. இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்றாா்.