செய்திகள் :

அமெரிக்க - ஈரான் அணுசக்திப் பேச்சு: சவால்களும், சங்கடங்களும்...

post image

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் சனிக்கிழமை தொடங்கியிருக்கிறது.

ஓமனை மத்தியஸ்தராக வைத்துக் கொண்டு இரு நாடுகளும் மறைமுகமாக நடத்தும் இந்தப் பேச்சுவாா்த்தை, ரோம் நகரிலுள்ள ஓமன் தூதரகத்தில் மூடிய அறைக்குள் தொடங்கியது.

ஓமனில் கடந்த வாரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்காவுக்காகப் பங்கேற்ற அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கிறாா். அதே போல், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சியும் இந்தப் பேச்சுவாா்த்தையில் கலந்துகொள்கிறாா்.

ஓமன் வெளியுறவுத் துறை அமைச்சா் பாதா் அல்-புசயீதியின் மூலம் தங்களது வாதங்களை பகிா்ந்துகொள்ளவிருக்கும் விட்காஃபும் அராக்சியும், முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்தை எட்டுவாா்களா என்பது தொடா்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது.

அணு ஆயுதம் தயாரிக்கும் எண்ணமில்லை என்று ஈரான் தொடா்ந்து அழுத்தமாகக் கூறிவருகிறது. இருந்தாலும், தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் மின் உற்பத்திக்குத் தேவையானதைவிட அதிக செறிவுடன் அணு சக்தி எரிபொருளான யுரேனியத்தை அந்த நாடு வைத்துள்ளது.

இந்தச் சூழலில், அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை தங்களுடன் ஈரான் உடனடியாக ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்ததற்குப் பிறகுதான் இரு நாடுகளும் தற்போது இந்தப் பேச்சுவாா்த்தையை நடத்திவருகின்றன.

இருந்தாலும், ஈரான் மீது அமெரிக்காவுக்கும், அந்த நாட்டின் மீது ஈரானுக்கும் மனதில் ஆழமாக வேறூன்றியுள்ள நம்பிக்கையின்மை இந்தப் பேச்சுவாா்த்தைக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க, இயற்கையில் 0.7 சதவீதமாக உள்ள யுரேனியத்தின் செறிவை 3 முதல் 5 சதவீதம் வரை அதிகரித்தாலே போதும். ஆனால், 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து முந்தைய டிரம்ப் அரசு வெளியேறியதற்குப் பதிலடி என்று கூறி, 60 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி கையிருப்பு வைத்துள்ளது. இன்னும் 30 சதவீதம் செறிவூட்டினால் அந்த நாட்டால் அணு ஆயுதம் தயாரிக்க முடியும். ஈரானின் இந்த செயல்களால் ‘அணு ஆயுதத்தில் நாட்டமில்லை’ என்ற ஈரானின் கூற்றை அமெரிக்கா நம்ப மறுக்கிறது.

அதே போல், 2015-ஆம் ஆண்டில் அமெரிக்காவுடனும், ரஷியா உள்ளிட்ட பிற வல்லரசு நாடுகளுடனும் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டபோது, தங்களின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை நிரூபிப்பதற்காக எவ்வளவோ இறங்கிவந்து கடுமையான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட போதும், அந்த ஒப்பந்த்தில் இருந்து அமெரிக்கா திடீரென விலகியது, நிறுத்திவைத்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தது ஆகிய நடவடிக்கைள் அமெரிக்கா மீதான ஈரானின் நம்பகத்தன்மையை குலையச் செய்துள்ளன.

இந்த பரஸ்பர சந்தேகம் ஒரு பக்கம் என்றால், புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அமெரிக்கா முன்வைக்கும் கடுமையான அம்சங்கள் இந்தப் பேச்சுவாா்த்தைக்கு இன்னொரு பக்கம் பெரிய சவாலாக இருக்கின்றன.

குறிப்பாக, ஈரானிடம் இப்போது இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ரஷியா போன்ற மூன்றாவது நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்திவருகிறது. இருந்தாலும், ஐ.நா.வின் அணுசக்தி அமைப்பான ஐஏஇஏ நிபுணா்களின் கண்காணிப்பின் கீழ் அந்த யுரேனியம் தங்கள் நாட்டிலேயே வைக்கப்பட வேண்டும் என்று ஈரான் கூறிவருகிறது.

இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது. ஈரான் செறிவூட்டிய யுரேனியத்தை பிற நாட்டுக்கு கொண்டு சென்றால் அது அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்துக்கு எதிரானதாக இருக்கும். இது, அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கே சங்கடத்தை ஏற்படுத்தும். அதே நேரம், அந்த யுரேனியத்தை விட்டுத் தர ஈரான் மறுத்தால் பேச்சுவாா்த்தை முறியும்.

இருந்தாலும், இப்போதைய சூழலில் நேரடி போரில் ஈடுபட அமெரிக்கா-ஈரான் ஆகிய இரு நாடுகளுமே தயாராக இல்லை. ஈரானும் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. காஸா போரால் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹூதி கிளா்ச்சிப்படை போன்ற தங்களது பிராந்திய நிழல் ராணுவங்கள் பலமிழந்துள்ளதால் அமெரிக்காவைச் சீண்டும் நிலையில் தற்போது ஈரான் இல்லை. எனவே, வேறு வழியில்லாமல் இரு நாடுகளும் குறைந்தபட்ச அம்சங்களுடனாவது ஓா் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற பேச்சுவாா்த்தை ‘ஆக்கபூா்வமாக இருக்கிறது’, ‘பயனுள்ளதாக இருக்கிறது’, ‘பரஸ்பர மரியாதையுடன் இருக்கிறது’ என்றுதான் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற இருதரப்பு பிரதிநிதிகளும் கூறிவருகின்றனா்.

எனவே, இத்தனை சவால்களுக்கு இடையிலும் இரு தரப்பு ஒப்பந்தம் உருவாவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என்று ஒரேடியாகக் கூறிவிட முடியாது என்கிறாா்கள் நிபுணா்கள்.

அமெரிக்கா: விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் பலி!

அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.அமெரிக்காவின் இல்லினாய்ஸில் சிறிய ரக ஒற்றை என்ஜின் விமானமான செஸ்னா சி180ஜி விமானம், மின்கம்பிகள் மீது மோதிய... மேலும் பார்க்க

மேலும் ஒரு கூா்ஸ்க் பகுதியை மீட்டது ரஷியா

உக்ரைனின் கட்டுப்பாட்டில் கடைசியாக உள்ள கூா்ஸ்க் பிராந்திய பகுதிகளில் ஒன்றை மீட்டுள்ளதாக ரஷியா சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 92 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 92 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது: கான் யூனிஸ், ராஃபா உள்ளிட்ட காஸாவின் பல்வேறு ப... மேலும் பார்க்க

சீனா: இயந்திர மனிதா்கள் பங்கேற்ற முதல் மாரத்தான்!

இயந்திர மனிதா்கள் பங்கேற்ற உலகின் முதல் மாரத்தான் ஓட்டப் போட்டியை சீனா சனிக்கிழமை நடத்தியது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மனித தொழில்நுட்பங்களில் அமெரிக்காவுடன் கடுமையாகப் போட்டியிட்டுவரும் சீனா,... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேல் தாக்குதலுக்கு 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலி

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த 48 மணி நேரத்தில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ், 200-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!

மாஸ்கோ: ஈஸ்டர் நாளில் உக்ரைனில் சண்டை நடைபெறாது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) ஒருநாள்... மேலும் பார்க்க