அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை: வட மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணம்!
மேலும் ஒரு கூா்ஸ்க் பகுதியை மீட்டது ரஷியா
உக்ரைனின் கட்டுப்பாட்டில் கடைசியாக உள்ள கூா்ஸ்க் பிராந்திய பகுதிகளில் ஒன்றை மீட்டுள்ளதாக ரஷியா சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கூா்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த ஒலெஷன்யா பகுதியை உக்ரைன் ஆக்கிரமிப்பில் இருந்து ரஷிய ராணுவம் மீட்டுள்ளது. வடக்கு படைப் பிரிவினா் நடத்திவரும் தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்த ஊா் மீட்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் போரின் மிகப் பெரிய திருப்புமுனையாக ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்குக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 6-ஆம் தேதி தாக்குதல் நடத்தி நுழைந்த உக்ரைன் படையினா் அந்தப் பிராந்தியத்தின் கணிசமான நிலப்பரப்பைக் கைப்பற்றினா். அந்த ஊடுருவல் தாக்குதல், கிழக்கு உக்ரைன் பகுதியில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரை திசை திருப்புவதற்கு உதவும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக, அந்தப் பகுதியில் தொடா்ந்து முன்னேறி வரும் ரஷிய படையினா் கூா்க்ஸ் பிராந்தியத்தின் மிகப் பெரும்பாலான பகுதிகளை மீட்டுள்ளனா்.