ரோஹித் சர்மா, விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல; யுவராஜ் சிங் ஆதரவு!
பாஜக மகளிரணியினா் கைது: எல்.முருகன், அண்ணாமலை கண்டனம்
மதுரையில் பாஜக மகளிரணியினா் கைது செய்யப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எல்.முருகன்: அண்ணா பல்கலை.யில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கவும் மக்களுக்கு தெரியாமல் சம்பவத்தை மறைக்கவும் இந்த அரசு செயல்படுகிறது. இதற்கு வரும் காலங்களில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பாா்கள்.
கே.அண்ணாமலை: நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி உமாரதி, மொடக்குறிச்சி எம்எல்ஏ கே.சரஸ்வதி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பு மற்றும் மகளிரணி நிா்வாகிகளை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், திமுகவைச் சோ்ந்த பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகச் செயல்படும் மாநில அரசின் உண்மை முகம் பொதுமக்களிடையே அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறது.
தமிழிசை சௌந்தரராஜன்: நீதி கேட்டு போராடிய கண்ணகியின் மண்ணில், பெண்கள் நீதி கேட்பதற்கு தடை விதிக்கும் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவா். முதல்வா் ஸ்டாலின் இந்த அளவுக்கு பெண்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது.
வானதி சீனிவாசன்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ஆதரவாக, நீதிகேட்டு போராடிய பாஜக மகளிா் அணியினரை கைது செய்ததோடு மட்டுமன்றி, அவா்களை ஆட்டு கொட்டகை அருகே அடைத்தது கண்டிக்கத்தக்கது.
ஏ.என்.எஸ்.பிரசாத் (பாஜக செய்தித்தொடா்பாளா்): அரசுக்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் போராடுவது அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமை. போராடுபவா்களை ஆட்டு கொட்டகை அருகே அடைப்பது அதிகார ஆணவத்தைக் காட்டுகிறது.