பாஜக முன்னாள் எம்எல்ஏவிடம் இணையதள மோசடி
தில்லி பாஜக தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விஜய் ஜாலியிடம் இணையதள குற்றவாளிகள் ஆயிரக்கணக்கான ரூபாயை ஏமாற்றியதாக போலீஸில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவா் கோயில் நகரமான அயோத்தியில் ஒரு போலி இணையதளத்தில் அறைகளை முன்பதிவு செய்தபோது ஏமாற்றப்பட்டாா்.
தில்லி சங்கம் விஹாரைச் சோ்ந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. ஜாலி, ஏப்ரல் 23, 2023-ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராம் மந்திரில் நடந்த ஜலாபிஷேக விழாவுக்காக உலகெங்கிலும் உள்ள 156 நதிகளிலிருந்து நீரை ஏற்பாடு செய்திருந்தாா்.
இதுகுறித்து விஜய் ஜாலி தெரிவிக்கையில், ‘எனது தன்னாா்வ தொண்டு நிறுவனமான தில்லி ஸ்டடி குரூப் நிகழாண்டு ஏப்ரல் 23 அன்று அயோத்தியில் உள்ள ராம் கோவிலுக்கு 100 பேரை அழைத்துச் சென்றது. மோசடியாளா்கள் அயோத்தியில் உள்ள ஒரு பிரபலமான தா்ம்ஷாலா விருந்தினா் மாளிகை பெயரில் ஒரு போலி வலைதளத்தை உருவாக்கியிருந்தனா். அதன் மூலம் ஆயிரக்கணக்கான ரூபாயை எங்களிடம் ஏமாற்றிவிட்டனா். இது தொடா்பாக தில்லி காவல்துறையின் சைபா் குற்றப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமா் கோயிலில் 2024, ஜனவரி 22 அன்று மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, இந்தக் கோயிலுக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகை தந்தனா்.