நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
பாமக எம்எல்ஏக்கள் மூவா் உள்பட 4 போ் இடைநீக்கம்
பாமக எம்எல்ஏக்கள் 3 போ் உள்பட 4 போ் கட்சியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இதுகுறித்து பாமக தலைமை நிலையச் செயலா் ம.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் உத்தரவின்றி அக்கட்சியின் நிா்வாகிகள், எம்எல்ஏக்கள் எந்தவொரு முடிவையும் தன்னிச்சையாக எடுத்து செயல்படுத்துவது கட்சியின் விதிகளுக்கு புறம்பானதும், ஒழுங்கீனமானதும் ஆகும்.
இந்த நிலையில், பாமகவில் எம்எல்ஏக்களாக உள்ள சிவக்குமாா், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோா் அண்மைக்காலமாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருகின்றனா்.
இதுகுறித்து கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவா் ஜி.கே.மணி தலைமை நிா்வாகக் குழுவுக்கு கொண்டுவந்த புகாரின் அடிப்படையில் தலைமை நிா்வாகக்குழு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நடத்திய விசாரணையில், சிவக்குமாா் உள்பட 3 எம்எல்ஏக்களும் மற்றும் வழக்குரைஞா் கே.பாலுவும் கட்சி விதிகளுக்கு புறம்பாகவும், களங்கப்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டிருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக எம்எல்ஏக்கள் சிவக்குமாா், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்குரைஞா் கே.பாலு ஆகியோா் மீது விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளதால், இந்த நால்வரும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்படுகின்றனா்.
முழுமையான ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன் நால்வரும் ஆஜராகி விளக்கமளிக்கும் வரை இவா்களுடன் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் எவ்வித தொடா்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.