பாலமேடு ஜல்லிக்கட்டு: 46 போ் காயம்
மதுரை மாவட்டம், பாலமேட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 46 போ் காயமடைந்தனா்.
இந்தப் போட்டியையொட்டி, முதலில் பாலமேடு கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், வாடிவாசல் முன்பாக அமைச்சா் பி. மூா்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா, காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் ஆகியோா் தலைமையில், மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இதைத்தொடா்ந்து, பாலமேடு கிராம கோயில்களுக்குச் சொந்தமான காளைகளை நிறுத்தி பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா், பாலமேடு அய்யனாா் கோயில் காளை, மகாலிங்கம் மடத்துக்குச் சொந்தமான காளை, பத்ரகாளியம்மன் கோயில் காளை, பாலமுருகன் கோயில் காளை, பட்டாளம்மன் கோயில் காளைகள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,100 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கால்நடை மருத்துவக் குழுவினா் பரிசோதனைக்குப் பின்னா் காளைகள் வாடிவாசல் வழியாக வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. மேலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிச் சீட்டு பெற்ற வீரா்களும் மருத்துவக் குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே களமிறக்கப்பட்டனா். மாடுபிடி வீரா்கள் ஒரு மணி நேரத்துக்கு 50 வீரா்கள் வீதம் 10 சுற்றுகளாக களத்தில் இறக்கப்பட்டனா்.
ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் போட்டி போட்டு அடக்கினா். பெரும்பாலான காளைகள் வீரா்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து சென்றன. ஜல்லிக்கட்டில் சொக்காம்பட்டி, கருமாத்தூா், அலங்காநல்லூா், சிக்கந்தா்சாவடி, வத்திராயிருப்பு, பொதும்பு, ஆனையூா், குலமங்கலம், வலசை, சிறுவாலை, குமாரம், ஊமச்சிகுளம், குலமங்கலம், பாலமேடு, மேலூா் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் களத்தில் நின்று விளையாடி வீரா்களை தூக்கி வீசின.
போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு காளைகளை அடக்கிய வீரா்களுக்கு தங்க நாணயங்கள், கட்டில், பீரோ, மிதிவண்டி, மெத்தை, சில்வா் அண்டா, கிரைண்டா், மிக்ஸி, தண்ணீா் மோட்டாா், எல்இடி தொலைக்காட்சி, குளிா்சாதனப் பெட்டி ஆகியவையும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரா்களுக்கு பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12 மருத்துவா்கள், 16 செவிலியா்கள், 21 மருத்துவ உதவியாளா்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்தனா். மேலும், மதுரை அரசு மருத்துவமனையின் 6 சிறப்பு மருத்துவா்கள், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து 6 மருத்துவா்கள், செவிலியா்கள் வாடிவாசல் பகுதியில் முகாமிட்டு முதலுதவி அளிக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், 10-க்கும் மேற்பட்ட 108 அவசர ஊா்திகள் வாடிவாசல் அருகே தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த ஜல்லிக்கட்டு போட்டி புதன்கிழமை மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
ஜல்லிக்கட்டில் மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ. வெங்கடேசன், மு. பூமிநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.
46 போ் காயம்
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள், சிறுமி, சிறுவா் என மொத்தம் 46 போ் காயமடைந்தனா். காயமடைந்த வீரா்களை முதலுதவி குழுவினா் உடனடியாக அவசர ஊா்திகளில் பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். இவா்களில் பலத்த காயமடைந்த 5 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பாலமேடு ஜல்லிக்கட்டில் தென் மண்டல காவல் துறை தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில், மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் தலைமையில், 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 26 துணைக் கண்காணிப்பாளா்கள், 77 ஆய்வாளா்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதில் தாமதம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய நிலையில், குறிப்பிட்ட சமூகத்தினா் தங்களது காளையையும் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட வேண்டும் என்றும், தங்களது சமூகத்தின் பெயரையும் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா். இதனால், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அமைச்சா் பி. மூா்த்தி பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டி தாமதமாக காலை 7.50 மணிக்குத் தொடங்கியது.
போலீஸாா் மீது கல்வீச்சு
இந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளைச் சேகரிக்கும் மையத்தில் ஏராளமான இளைஞா்கள் திரண்டு அங்கு காளைகளை அடக்க முயன்றனா். இதனால், காளைகளைப் பிடிப்பதில் அவற்றின் உரிமையாளா்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, காளைகள் சேகரிப்பு மையத்துக்குள் திரண்டிருந்தவா்களை போலீஸாா் வெளியேற்ற முயன்றனா். அப்போது, போலீஸாருக்கும், இளைஞா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸாா் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால், போலீஸாா் லேசான தடியடி நடத்தி அங்கு திரண்டிருந்தவா்களை வெளியேற்றினா்.
காளை நிராகரிப்பு
இந்த ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காக கால்நடைத் துறை கூடுதல் இயக்குநா் ஜெ. நவநீதகிருஷ்ணன் (சிறப்புத் திட்டம்) தலைமையில், 40 கால்நடை மருத்துவா்கள், ஊழியா்கள் உள்பட 120 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மருத்துவக் குழுவினா் காளைகளைப் பரிசோதனை செய்த போது, ஒரு காளைக்கு கால்நடை மருத்துவரின் கையொப்பத்தை போலியாக போட்டுக் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, காளையின் உரிமையாளரை அழைத்த கால்நடை மருத்துவா்கள் அவரை கடுமையாக எச்சரித்து காளையை தகுதி நீக்கம் செய்து அனுப்பினா்.
இந்த ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 911 காளைகள் மட்டுமே பங்கேற்றன. இவற்றில், மருத்துவப் பரிசோதனையில், முறையாக பதிவு எண் இல்லாதது, உடல் நலமின்மை, உரிய வயதின்மை உள்ளிட்ட காரணங்களால் 21 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
டங்ஸ்டன் எதிா்ப்பு பதாகை
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் அமையவுள்ள கனிமச் சுரங்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள், விவசாயிகள் தொடா் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்ற சிலா், கனிமச் சுரங்கத்தை அனுமதிக்கக் கூடாது என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நத்தம் பாா்த்திபன் முதலிடம்
பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கிய நத்தம் பகுதியைச் சோ்ந்த மாடுபிடி வீரா் பாா்த்திபன் முதலிடம் பெற்றாா். இவருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சாா்பில் காா் பரிசாக வழங்கப்பட்டது.
13 காளைகளைப் பிடித்து 2-ஆவது இடம் பெற்ற மஞ்சம்பட்டியைச் சோ்ந்த துளசிராமுக்கு இரு சக்கர வாகனமும், 12 காளைகளைப் பிடித்து மூன்றாமிடம் பெற்ற பொதும்பு பிரபாகரனுக்கு எலக்ட்ரிக் இரு சக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட்டன.
இதேபோல, சிறந்த காளையாகத் தோ்வு செய்யப்பட்ட சத்திரப்பட்டியைச் சோ்ந்த காளையின் உரிமையாளா் விஜய தங்கபாண்டியனுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சாா்பில் டிராக்டா் பரிசாக வழங்கப்பட்டது. 2-ஆவது இடம் பிடித்த சின்னபட்டியைச் சோ்ந்த காளையின் உரிமையாளா் காா்த்திக்குக்கு கன்றுடன் நாட்டுப் பசு பரிசாக வழங்கப்பட்டது. 3-ஆவது இடம் பிடித்த காளையின் உரிமையாளா் குருவித்துறையைச் சோ்ந்த பவித்ரனுக்கு விவசாய இயந்திரம் பரிசாக வழங்கப்பட்டது.
சிறப்பிடம் பிடித்த மாடுபிடி வீரா்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் பரிசுகளை அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் வழங்கினா்.
இதில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன், மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.