பாமக: ``தந்தையின் சிகிச்சை குறித்து அன்புமணி தவறான தகவலை பரப்பி இருக்கிறார்'' - ...
பாலியல் கொடுமை: ``பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? இரவு நேரங்களில் வெளியே வராதீர்கள்'' - மம்தா பானர்ஜி
மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி இரவில் வெளியில் வந்தபோது மூன்று பேர் கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒடிசாவைச் சேர்ந்த அம்மாணவி, தன்னுடைய ஆண் நண்பருடன் நள்ளிரவில் விடுதியில் இருந்து வெளியே வந்தார்.
கல்லூரி வாசலுக்கு மாணவி வந்தவுடன், மர்ம நபர்கள் மாணவியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மாணவியின் ஆண் நண்பர் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த குற்ற சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? - மம்தா கேள்வி
இது போன்று மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்கள் ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் நடந்திருக்கின்றன. இதனால் தற்போது நடந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இதற்கு பதிலளித்துள்ள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ''பாதிக்கப்பட்ட மாணவி தனியார் கல்லூரியில் படிக்கிறார். அப்படி இருக்கும் போது அவரின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
இரவு 12.30 மணிக்கு விடுதியில் இருந்து எப்படி வெளியில் வந்தார். நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. போலீஸார் அனைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களையும் இரவு கலாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களை வெளியே வர அனுமதிக்கக் கூடாது. மாணவிகள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வரும் மாணவிகள் இரவு நேரங்களில் வெளியில் வராதீர்கள்.
தேவைப்படும்போது தேவையான இடத்திற்கு செல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கும் போலீஸார் வந்து பாதுகாத்துக்கொண்டிருக்க முடியாது.
கல்லூரி இருக்கும் இடம் ஒரு வனப் பகுதி. இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இது போன்ற சம்பவங்கள் வெளி மாநிலத்தில் நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது.
பாஜக கடும் கண்டனம்
உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசாவில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன. அங்குள்ள அரசாங்கங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
ஒடிசாவின் கடற்கரையில் பெண்கள் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. குற்றவாளிகள் மீது ஒடிசா அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார். மம்தா பானர்ஜியின் இக்கருத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா அளித்த பேட்டியில்,
''முதல்வர் மம்தா பானர்ஜி பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு பதில் அவர்களை வெளியில் செல்ல வேண்டாம் என்று சொல்கிறார்.
அப்படிப்பட்ட அரசு ஆட்சியில் இருக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஒரு அராஜகவாத, இதயமற்ற மம்தா மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதை இப்போது உணர்ந்துள்ளனர்.
அவர் ராஜினாமா செய்ய வேண்டும். மம்தா பானர்ஜி நடந்த சம்பவத்திற்கு மகள்களை குறை கூறுகிறார். அதேசமயம் குற்றத்தில் ஈடுபட்டவர்களை ஆதரிக்கிறார்.
இதற்கு முன்பும் மம்தா பானர்ஜி இதே போன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார்'' என்றார்.