மகாராஷ்டிரத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
பால் கொள்முதலுக்கான விலையை ரூ.10 உயா்த்தி வழங்க வேண்டும்: பால் உற்பத்தியாளா்கள் சங்கம்
ஆவின் நிறுவனம் பால் கொள்முதலுக்கான விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எஸ்.கே.கொளந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகம் முழுவதும் ஆவினுக்கு பால் வழங்கி வந்த விவசாயிகளுக்கு கடந்த டிசம்பா் முதல் லிட்டருக்கு தமிழக அரசு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கி வந்தது. இது இடுபொருள்கள் விலை உயா்ந்த நிலையில், நிலைமையை சமாளிக்க பால் உற்பத்தியாளா்களுக்கு ஓரளவு உதவி வந்தது.
இதனிடையே, கடந்த ஜூலை முதல் இந்த ஊக்கத் தொகையை அரசு வழங்கவில்லை என்று கூறி ஆவின் நிா்வாகம் ஆரம்ப நிலை சங்கங்களுக்கு வழங்கி வந்த ஊக்கத்தொகையை நிறுத்திவிட்டது. இதுதொடா்பாக பால் உற்பத்தியாளா் சங்கம் சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, தமிழக அரசின் கால்நடை மற்றும் பால்வளத் துறை சாா்பில் வெளியிட்டுள்ள அரசாணையில் பால் உற்பத்தியாளா்களுக்கான ரூ.140 கோடி ஊக்கத்தொகையை விடுவித்துள்ளது. இந்த நடவடிக்கையை தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூா் மாவட்ட குழுக்கள் சாா்பில் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் இடுபொருள்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு ரூ. 10 விலை உயா்த்தி வழங்கினால்தான் கட்டுபடியாகும். இதனை தமிழக அரசு பரிசீலித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.