வெங்காயம் கிலோ ரூ. 18-க்கு விற்பனை: காய்கறிகள் விலையும் குறைந்தது
பிஎஸ்எல்: ஒளிபரப்பு குழுவில் உள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு!
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பணியாற்றும் ஒளிபரப்பு குழுவில் உள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு ராணுவத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஒளிபரப்பு தயாரிப்பாளர்கள், கேமரா மேன்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு பணியில் உள்ளவர்களில் ஒளிபரப்பு மற்றும் தயாரிப்பு குழு பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள், கேமராமேன்கள், கண்காணிப்பு நிபுணர்கள் உள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் அனைத்து இந்தியர்களும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதையும் படிக்க: ஆடுகளத்தை தவறாக கணித்துவிட்டோம்: டேனியல் வெட்டோரி