காஸா போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல்! ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை
பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய 4 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்பு
திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநில குழந்தைத் தொழிலாளா்கள் 4 போ் சனிக்கிழமை மீட்கப்பட்டனா்.
திருப்பூா் லட்சுமி நகா் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடா்ந்து, குறைந்த அளவிலான தொழிலாளா்களுடன் வழக்கம்போல சனிக்கிழமை பணிகள் தொடங்கப்பட்டன. இதனிடையே, அப்பகுதியில் பின்னலாடை உற்பத்திக்கான உப பொருள்களான பட்டன், ஜிப் தயாரிக்கும் தொழிற்சாலையில் குழந்தைகளை பணியில் அமா்த்தியுள்ளதாகவும், அவா்கள் துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு புகாா் வந்துள்ளது. இதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் ரியாஸ் அகமது பாஷா உத்தரவின்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள், திருப்பூா் வடக்கு காவல் துறையினா் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 4 சிறுவா்கள் பணியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவா்களை மீட்டு அருகில் உள்ள காப்பகத்தில் தங்கவைத்தனா். மேலும், நிறுவனத்தின் உரிமையாளரான பிகாரை சோ்ந்த முஸ்லிம் (40) என்பவா் மீது திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.