பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம்: 1.2 லட்சம் வாய்ப்புகளுக்கு 6.2 லட்சம் விண்ணப்பங்கள்!
பிரதமரின் தொழில் பழகுநர் (Internship) திட்டத்தில் 1.2 லட்சம் வாய்ப்புகளுக்கு 6.2 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
2024 - 2025க்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 500 நிறுவனங்களில், 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான இணையதளம் அக். 3 ஆம் தேதியில் தொடங்கப்பட்டு, அக். 12 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நிறுவனங்கள் இடுகையிட்ட 1.27 லட்சம் வாய்ப்புகளுக்கு அக். 12 - நவ. 15 வரையில் சுமார் 6.21 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதையும் படிக்க:எந்தப் பங்குகளை வாங்கலாம்? சிறந்த 5 பங்குகள்!
குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 21 முதல் 24 வயதுடையவர்களில் 4.87 லட்சம் விண்ணப்பதாரர்களே தகுதியுடன் விண்ணப்பித்துள்ளனர். 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நவ. 20 வரையில் ரூ. 6.04 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், நவ. 30 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் நிறுவனங்களில் சேர வேண்டும்; அவர்களுக்கு ஒரு முறை மானியமாக ரூ. 6,000 வழங்கப்படும். நிறுவனத்தில் 12 மாத காலத்திற்கு பயிற்சி பெறும் வாய்ப்புடன், அவர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 4,500 அரசும், ரூ. 500 அந்த நிறுவனமும் வழங்கும்.